பொள்ளாச்சி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தில் பயனடைய தகுதியுள்ள வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் செய்தி குறிப்பு வருமாறு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தில் 'எலைட்' பிரிவினருக்கு (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) அதிகபட்சம் 25 நபர்களுக்கு ஒரு வருடத்திற்கு, 30 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் 'எம்.ஐ.எம்.எஸ்.,' திட்டத்தில் 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட, அதிகபட்சம் 75 வீரர்களுக்கு ஒரு வருடத்திற்கு 12 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் 'சி.டி.எஸ்.,'யில் அதிகபட்சம் 100 வீரர்களுக்கு (10 மாற்றுத்திறனாளிகள் உட்பட) ஒரு வருடத்திற்கு ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆனணயத்தின்www.sdat.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் வரும், 20ம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு, 95140- 00777, 78258 -83865 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.