சமீபத்திய கள்ளச்சாராய மரணங்களை அடுத்து, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடத்திவரும் விசாரணையில், கள்ளச்சாராய மொத்த வியாபாரி ஒருவரை பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது பற்றி மதுவிலக்கு அமலாக்க போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் என நான்கு மாவட்டங்களிலும் கள்ளச்சாராய மொத்த வியாபாரியாக செயல்படுபவர், திண்டிவனத்தைச் சேர்ந்த மரூர் ராஜா.
கடந்த ஏப்ரலில் நடந்த கள்ளச்சாராய வேட்டையில் கைது செய்யப்பட்ட மரூர் ராஜா, திண்டிவனம் கிளை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவர், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பல முக்கியஸ்தர்களுடன் நெருக்கமாக இருந்தார். தேர்தலுக்கு பின், தி.மு.க.,வில் இணைந்து விட்டார். தி.மு.க., அமைச்சர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்துடன் நெருக்கமாகி தன் மனைவி ரம்யாவை, திண்டிவனம் நகரமன்ற 20வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக்கி விட்டார்.
அமைச்சர் குடும்பத்தாரோடு நெருக்கம் என்பதால், உள்ளூர் போலீசிடமும் சகஜமான பழக்கத்தில் இருந்தார். அதனாலேயே அவரை பிடிக்க முடியாமல் இருந்தது. அவரை கைது செய்வதற்கே, சென்னையில் இருந்து தனிப்படை தேவைப்பட்டது.
அவரை வேலுார் அல்லது கடலுார் மத்திய சிறைக்கு தான் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், திண்டிவனம் கிளை சிறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அதற்கு ஏற்பாடு செய்தது, அமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர் திண்டிவனம் சிறையில் இருந்தே வியாபாரத்தை நன்றாக நடத்தி வருகிறார். உள்ளூர் போலீசும் எந்த தொந்தரவும் செய்வதில்லை.
அவரை ஒரு சாதாரண கள்ளச்சாராய வியாபாரி போல தான், போலீசார் சித்தரித்து வருகின்றனர். அவர் மொத்த வியாபாரியாக செயல்படுவது குறித்த தகவல்கள், மரக்காணம் மரணங்களுக்கு பின், மறைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement