பெங்களூரு: கர்நாடகாவில் 5 நாட்கள் இழுபறிக்கு பின்னர் முதல்வர் யார் என காங்கிரஸ் இன்று முடிவு செய்தது. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முதல்வர், துணை முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படுள்ளதாக கர்நாடகா காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா , கூறினார். முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக சிவக்குமார் பதவியேற்பர். வரும் 20 ம் தேதி நண்பகல் 12 மணியளவில் கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா நடக்கும் என தெரிவித்தார்.
கடந்த 10ம் தேதி நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள், 13ம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள, 224 இடங்களில், 135 இடங்களில் காங்கிரஸ் ஜெயித்து, தனி பெரும்பான்மை பெற்றுள்ளது.
எதிர்பார்த்தது போலவே முதல்வர் பதவிக்காக சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மல்லு கட்டினர்.இதுவே, தன் கடைசி தேர்தல் என்று, தேர்தலுக்கு முன்பே சித்தராமையா அறிவித்தார். 'இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்' எனவும் கூறி வரும் அவர், கடைசியாக ஒரு முறை முதல்வர் பதவி தரும்படி, மேலிடத்திடம் போராடினார்.
பொதுவாக, காங்கிரசில் மாநில தலைவராக இருப்பவருக்கே, முதல்வர் பதவி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, தனக்கு முதல்வர் பதவி தரும்படி, சிவகுமார் கேட்கிறார்.
'கொடுத்தால் முதல்வர் பதவி கொடுங்கள்; இல்லையேல், ஆளை விடுங்கள்; எந்தப் பதவியுமே வேண்டாம்' என முரண்டு பிடிக்கிறார் சிவகுமார்.
இருவரின் ஆதரவாளர்களும் தங்களது தலைவர்களுக்கே, முதல்வர் பதவி வேண்டும் என, போர்க்கொடி துாக்கினர்.
முதல்வர் பதவி குறித்து ஆலோசிக்க, புதுடில்லி வரும்படி இருவருக்கும் கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது. 15ம் தேதி சித்தராமையா டில்லி புறப்பட்டு சென்றார். ஆனால், வயிற்று வலியை காரணம் காட்டி, சிவகுமார் மறுநாள் தான் டில்லி புறப்பட்டு சென்றார்.
'ஆல் தி பெஸ்ட்'
டில்லியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இருவரிடமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது இருவரும் தங்களுக்கு, முதல்வர் பதவி வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தனர். இதையடுத்து, நேற்று இருவரிடமும் சோனியா பேசுவார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், நேற்று அவருக்கு பதிலாக ராகுல், இருவரிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
சோனியா வீட்டில் தங்கியுள்ள ராகுலை, முதலில் சித்தராமையா சந்தித்து பேசினார். அப்போது, தான் முதல்வராக இருந்தபோது செய்த வளர்ச்சி பணிகள் குறித்து கூறினார்.
எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தனக்கு இருப்பதால், முதல்வர் பதவி தர வேண்டும் எனவும் கேட்டுள்ளார். தான் முதல்வர் ஆனால், கட்சிக்கு என்ன லாபம் கிடைக்கும் என்றும் எடுத்துச் சொன்னார்.
இதை ஏற்ற ராகுல், சித்தராமையாவை முதல்வராக நியமிக்க முடிவு செய்தார்.
ஆலோசனை முடிந்ததும் சித்தராமையா, சோனியா வீட்டில் இருந்து புறப்பட்டார். அவரை வாசல் வரை வந்து, ராகுல் வழியனுப்பினார்.
அப்போது, 'சித்தராமையாஜி, இரண்டாவது முறையாக முதல்வர் ஆக போகிறீர்கள். நல்ல முறையில் ஆட்சி நடத்துங்கள். ஆல் தி பெஸ்ட்' என ராகுல் கூறினார்.
'கட்டை' போட்ட சிவகுமார்
இதையடுத்து, மாநிலத்தில் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் குஷி அடைந்தனர். அவரது சொந்த ஊரான, சித்தராமயனஹுண்டியில் கொண்டாட்டங்கள் களைகட்டின. அவரது பேனருக்கு பாலாபிஷேகமும் செய்யப்பட்டது.
ஆனால், இந்த கொண்டாட்டம் சிறிது நேரத்தில், 'புஸ்' ஆனது.இதற்கு காரணம், சிவகுமார் தான்.
ராகுலை சித்தராமையா சந்தித்துவிட்டு சென்ற பின், சிவகுமார் சந்தித்து பேசினார். அப்போது சிவகுமாரிடம், துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ளும்படி ராகுல் கூறியுள்ளார்.
அதற்கு, 'எக்காரணம் கொண்டும் துணை முதல்வர் பதவியை ஏற்க மாட்டேன். எனக்கு முதல்வர் பதவி தான் வேண்டும். ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்பதிலும், எனக்கு உடன்பாடு இல்லை. அப்போது இருந்து தற்போது வரை கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர இரவு, பகல் பாராமல் வேலை செய்து உள்ளேன். என கூறியுள்ளார்.