அரசியல் செய்தி

தமிழ்நாடு

உட்கட்சி மோதலால் சரியும் தி.மு.க., செல்வாக்கு

Updated : அக் 17, 2011 | Added : அக் 15, 2011 | கருத்துகள் (66)
Share
Advertisement
தி.மு.க., வில் ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால், சென்னையில் தி.மு.க.,வின் செல்வாக்கு சரிந்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல், சட்டசபை தேர்தல் தோல்வி, நிலஅபகரிப்பு வழக்குகள் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க.,வில் உட்கட்சி பூசலும் அதிகரித்துள்ளது. இதனால், பல மாவட்டங்களில் தி.மு.க., செல்வாக்கு சரியத்தொடங்கியுள்ளது. தி.மு.க., மாநில துணை
Internal disputes, DMK, உட்கட்சி மோதலால் சரியும் தி.மு.க.,,

தி.மு.க., வில் ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால், சென்னையில் தி.மு.க.,வின் செல்வாக்கு சரிந்து வருகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல், சட்டசபை தேர்தல் தோல்வி, நிலஅபகரிப்பு வழக்குகள் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க.,வில் உட்கட்சி பூசலும் அதிகரித்துள்ளது. இதனால், பல மாவட்டங்களில் தி.மு.க., செல்வாக்கு சரியத்தொடங்கியுள்ளது. தி.மு.க., மாநில துணை பொதுச்செயலர் பரிதிஇளம்வழுதி, கடந்த வாரம் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா இன்னும் ஏற்கப்படாத நிலையில், பரபரப்பு அறிக்கையை வெளியிட்டார். அதில், ஜெயலலிதாவை புகழ்ந்து போற்றி, அகவல் பாடியவர், தி.மு.க., தலைமைக்கு நெருக்கமாகி, தனக்கு எதிரான தகவல்களை "ஏவி வருவதாக கூறியுள்ளார். "மாற்று சிந்தனை தனக்கு எப்போதும் வராது, தி.மு.க., விலிருந்தே நியாயத்திற்காக போராடுவேன்' என, அதில் கூறியுள்ளார். இது, தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பரிதியின் அறிக்கை குறித்தும், அவரது நிலைகுறித்தும், அவரது ஆதரவாளரான தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது: கட்சியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக எம்.எல்.ஏ.,வாக இருக்கும், பரிதிஇளம் வழுதி, கருணாநிதியின் கட்டளைப்படி நடப்பவர். அவரது உழைப்புக்கு பலனாக மாநில துணைப்பொதுச் செயலர் பொறுப்பு கிடைத்தது. கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விலுள்ள சிலரே அவருக்கு எதிராக பணியாற்றி தோற்க வைத்தனர். இதில், 103வட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் நாதன், பேச்சாளர் வீராசாமி ஆகியோர் குறித்து, பரிதி தரப்பில் தலைமையில் புகார் வந்ததால், தலைமை விசாரித்து, மூவரையும் கட்சியிலிருந்து நீக்கியது. ஆனால், மூன்று நாட்களில், மீண்டும் எந்த நிபந்தனையோ, வருத்தமோ இன்றி மூவரையும் கட்சியில் சேர்த்துக்கொண்டனர். மாநில துணைபொதுச்செயலரை எதிர்த்தவர்களையே, தலைமையில் தட்டிக்கேட்காததால், கட்சியிலேயே பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.


சந்திக்க மறுப்பு: கடந்த வாரம், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஸ்டாலினை சந்தித்து, இந்த பிரச்னை குறித்து பரிதி பேச முயன்றார்; ஆனால் ஸ்டாலின் சந்திக்க வில்லை. பின், அவர் அறிவாலயம் வந்தபோது, சந்திக்க முயன்றார். அங்கு, இவர் வந்ததும் ஸ்டாலின் வீட்டிற்கு புறப்பட்டு விட்டார். மறுநாள், ஸ்டாலினின் வீட்டிற்கே பரிதி சென்றார். அங்கு, காலை 8 மணி முதல் 11 மணி வரை காக்கவைக்கப்பட்டார். கடைசி வரை ஸ்டாலினிடமிருந்து பதில் வரவில்லை. அவரது வீட்டு வேலைக்காரர்கள், "அண்ணன் இன்னும் எழுந்திருக்கவில்லை' என கூறியதால், மூன்று மணி நேர காத்திருப்புக்கு பின், பரிதி அங்கிருந்து திரும்பினார். பின்னர், போன் மூலமும், பேராசிரியர் அன்பழகன் மூலமும் தொடர்பு கொண்டும் பரிதியை ஸ்டாலின் சந்திக்கவில்லை. அதனால்தான், வருத்தமடைந்த பரிதி, மாநில பொறுப்பிலுள்ள தனக்கு, வட்டச் செயலர் கூட கட்டுப்படுவதில்லை; தலைமையும், தட்டிக்கேட்கவில்லை. இந்த நிலையில் மாநில பொறுப்பு எதற்கு என, ராஜினாமா செய்தார். ஆனாலும், தலைமையிடம் விளக்கம் தர பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், தலைமையிடம் தான் பதில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே பரிதி, அ.தி.மு.க., வில் சேரப்போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாயின.


தாய்வீடு: இதுகுறித்து, தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறும்போது,'முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை தான் பரிதி கூறுகிறார். அ.தி.மு.க.,வில் பரிதி சேரப்போவதாக, தி.மு.க., தலைமையிடம் வேலு கூறியதாக, பரிதிக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், பரிதியை பொறுத்தவரை, தி.மு.க.,வை மட்டுமே தன் தாய் வீடாக நினைத்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், தி.மு.க.,தலைவரையும், பொருளாளரையும் நேரில் சந்தித்து, உண்மையை தெரிவிக்க உள்ளார்' என்றார். தி.மு.க.,வில், வடசென்னை மாவட்ட தலைவர் வி.எஸ்.பாபு பதவியை ராஜினாமா செய்து ஒதுங்கி விட்டார். திருவள்ளூர் மாவட்ட தலைவர் சிவாஜியும் ராஜினாமா செய்தார். வடசென்னைக்கு, இதுவரை செயலர் நியமிக்காமல், பொறுப்பாளரையே நியமித்து கட்சியை நடத்தும் அளவுக்கு, பூசல்கள் இருக்கின்றன. தென்சென்னையிலும், அன்பழகனுக்கும், மா.சுப்பிரமணி தரப்புக்கும் பனிப்போர் உள்ளதாக கூறப்படுகிறது.சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தை ஓரங்கட்டி, செல்வகணபதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தூத்துக்குடியில், பெரியசாமியை விட அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அதிக அதிகாரம் தரப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு மாவட்டங்களிலும், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ள உட்கட்சிப்பூசல்களால், கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதாக தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்.


அ.தி.மு.க., ஆதரவில் ஸ்டாலின்: அடுத்த தலைவராக வரவுள்ள பொருளாளர் ஸ்டாலின், உட்கட்சி பூசல்களை சரிசெய்ய முயற்சிக்க வேண்டுமென, கட்சியினர் விரும்புகின்றனர். அ.தி.மு.க.,விலிருந்து தி.மு.க.,வுக்கு வந்த வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், செல்வகணபதி, அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆகியோர் தான், ஸ்டாலினுக்கும், தலைமைக்கும் நெருக்கமாக உள்ளதால், கட்சியில் பாரம்பரியமாக உள்ளவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஏற்கனவே, அழகிரி, ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே, பூசல் உள்ள நிலையில், ஸ்டாலினின் ஆதரவாளர்களுக்குள்ளும் பூசல் ஏற்பட்டுள்ளது, கட்சியின் மூத்த தலைவர்களை கவலையடையச் செய்துள்ளது.


வேலு என்ன சொல்கிறார்: பரிதி விவகாரம் குறித்து, திருவண்ணாமலை மாவட்ட செயலர் வேலுவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: பரிதி போன்ற மாநில துணைப்பொதுச்செயலருக்கு கீழ், கட்சிக்காக உழைக்கும் மாவட்ட செயலர்களில் நானும் ஒருவன். பரிதியை நாங்கள் மதிக்கிறோம். கட்சியில் எங்களுக்கு அவர் சீனியர். நான் திருச்சியில் தேர்தல் பணியிலிருந்தபோது, அவர் பிரச்னை தொடர்பாக பத்திரிகையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். அவருக்கும் எனக்கும், எந்த உரசலும், கீறலும் கிடையாது. அவர் என்னைப்பற்றி தவறாக சொல்லமாட்டார். அவரது அறிக்கையில் உள்ள வார்த்தைகளை வைத்து, கற்பனையாக என்னை நினைக்க வேண்டாம். பரிதி எனக்கு வேண்டிய, நான் மதிக்கும் நபர்களில் ஒருவர். அவரை வைத்து, எங்கள் மாவட்டத்தில் பல விழாக்களை நான் நடத்தியுள்ளேன். எனவே, எங்களுக்குள் பிரச்னை என்பது கனவிலும் கிடையாது. அதேபோல் அவர் தி.மு.க.,வை விட்டு எங்கும் செல்லமாட்டார். இதில் யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். அவரை போனில் தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கிறேன்.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
c. rajamanickam - TIRUPUR,இந்தியா
17-அக்-201116:43:41 IST Report Abuse
c. rajamanickam நாட்டில் மக்கள் பிரச்சினையை யார் பார்கிறார்கள் அவர்கள் பிரச்சினையை பார்பதற்கே நேரம் போதவில்லை மக்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன ஒட்டு போட்ட நாமமும் அதை அன்றே மறந்துவிடுகிறோம் அப்புறம் நமக்கும் அதை பேச யோக்கியதை இல்லை
Rate this:
Cancel
manoharan - chennai,இந்தியா
17-அக்-201108:25:37 IST Report Abuse
manoharan குடும்ப ஆட்சியால் தி மு க முடிவுக்கு வந்து விட்டது.
Rate this:
Cancel
G.Govindarajan Thenkondar - Thanjavur,இந்தியா
16-அக்-201123:58:50 IST Report Abuse
G.Govindarajan Thenkondar பெரியார் இருக்கும்வரை தி மு க விற்கும் அவர்தான் தலைவர். என்ற அண்ணாவின் விருப்பப்படி தி மு க வில் தலைவர் பதவி இல்லை. பொதுச்செயலர் பதவி தான் இருந்தது. ஆனால் அண்ணா இறந்தவுடன் பெரியார் இருக்கும்போதே தி மு க வில் தலைவர் பதவியை ஏற்படுத்தி தான் தான் தலைவர் என்று பட்டம் போட்டுக்கொண்டவர் தான் திருவாளர் மு.க.அவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X