ராயபுரம்,நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ராயபுரத்தில் 315 கோடி ரூபாய் செலவில் மூன்று இடங்களில், 2,080 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளன.
சென்னை, ராயபுரம், செட்டித் தோட்டம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் 1993ல் கட்டப்பட்டது. இதில், 240 குடும்பங்கள் வசித்து வந்தனர்.
அதேபோல், ராயபுரம், கிழக்கு கல்லறை சாலை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், 1980ல் கட்டப்பட்டது. இதில், 928 வீடுகள் உள்ளன.
மேலும், ராயபுரம், மேற்கு கல்லறை சாலை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், 1973ல் கட்டப்பட்டது. இதில், 928 வீடுகள் உள்ளன. மேற்கன்ட அனைத்து கட்டடங்களும், பாழடைந்து, மக்கள் வாழ தகுதியற்றதாக மாறின. அவற்றை இடித்து புது கட்டடங்கள் கட்ட கோரிக்கை வலுத்தது.
இதையடுத்து, தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு கட்டடத்தை ஆய்வு செய்ததில், மிகவும் பழுதடைந்து அபாயகர நிலையில் இருப்பது உறுதியானது.
இதையடுத்து, அவற்றை இடித்து, புது கட்டடம் கட்ட, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் முடிவெடுத்தது. இதற்கான கட்டட பணிகள் விரைவில் துவங்கி முடித்து, 24 மாதங்களுக்குள் பொதுமக்களுக்கு வீடு வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்காக, 315 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கிழக்கு கல்லறை சாலையில் 960 வீடுகளும், மேற்கு கல்லறை சாலையில் 880 வீடுகளும், செட்டி தோட்டம் பகுதியில் 240 வீடுகளும் கட்ட முடிக்கப்பட்டது. இதற்கான பணிகள் துவங்கி நடக்கின்றன.
இதுகுறித்து ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி கூறியதாவது:
செட்டித் தோட்டம் பகுதியில் வசித்த 240 குடும்பங்களுக்கு, தற்காலிக இடஒதுக்கீடு ஆணை மற்றும் 24 ஆயிரம் ரூபாய் கருணை தொகை வழங்கப்பட்டது. தற்போது செட்டி தோட்டம் குடியிருப்புகள் இடிக்கும் பணி நடக்கின்றன.
கிழக்கு கல்லறை சாலை மற்றும் மேற்கு கல்லறை சாலை குடியிருப்பு மக்களுக்கு, விரைவில் தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை மற்றும் 24 ஆயிரம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும்.
பின் குடியிருப்புகள் இடித்து, ஓரிரு மாதங்களில் கட்டுமான பணிகள் துவக்கப்படும். 210 சதுரடி வீடுகள், தற்போது 420 சதுரடி வீடுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.