சென்னை, மொபைல் போனில் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை, திருமங்கலம் ரயில் நிலையத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் சித்திக், நேற்று அறிமுகம் செய்தார்.
பயணியர், தங்கள் 'வாட்ஸ் ஆப்' எண்ணில் இருந்து 83000 86000 என்ற எண்ணிற்கு 'ஹாய்' என குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
தொடர்ந்து, தமிழ் அல்லது ஆங்கில வழியை தேர்ந்தெடுத்து, புறப்படும் இடம், சேரும் இடம் உள்ளிட்ட தகவல்களை குறிப்பிட வேண்டும்.
பின், 'வாட்ஸ் ஆப் பே, ஜி பே, நெட்பேங்கிங்' வாயிலாக பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். எங்கிருந்து வேண்டுமென்றாலும் டிக்கெட் எடுக்கலாம்.
சென்னை, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்திக், நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை மெட்ரோ ரயில் பயணத்திற்கு டிக்கெட் எடுக்க கவுன்டர், பயண அட்டை, தேசிய பொது பயண அட்டை வசதி உள்ளது.
தற்போது, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளோம்; 20 சதவீத கட்டண சலுகையும் உண்டு. தவிர, எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பயணியரை ஊக்கப்படுத்தும் டிக்கெட் வழங்க உள்ளோம். ஐந்து கி.மீ., துாரத்தில் இருப்போருக்கு 15 நாட்கள் அல்லது ஒரு மாத தள்ளுபடி டிக்கெட், இலவச டிக்கெட் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
தினமும் 2.50 லட்சம் பேர் பயணிப்பதால், ரயில் பெட்டிகளை அதிகரிக்கவும், புதிய ரயில் வாங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சென்னை விமான நிலையம் -- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கு, அரசு அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பகுதி 2025 இறுதி அல்லது 2026ம் ஆண்டு துவக்கத்தில் முடியும். 2028ல், மெட்ரோவின் ஒட்டுமொத்த பணிகளும் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.