செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், வாடகை கட்டடத்தில் இயங்கும் 106 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக, 78 மையங்களுக்கு 9.69 கோடி ரூபாயில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார் மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், 1,266 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.
இதில், 106 அங்கன்வாடி மையங்கள் தனியார் கட்டடத்தில் வாடகைக்கு இயங்குகின்றன.
இந்த மையங்களில், போதிய வசதிகள் இல்லாமல் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். இதனால், அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம், தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, வாடகை கட்டடத்தில் இயங்கும் மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டித்தர, மாவட்ட கலெக்டர் மற்றும் அரசுக்கு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் மூலம், திட்ட அலுவலர் கருத்துரு அனுப்பி வைத்தார்.
அதன்பின், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களில், அங்கன்வாடி மையம் கட்ட, ஊரக வளர்ச்சித் துறைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 2021 - 22ம் ஆண்டு, 15 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட, 1 கோடியே 63 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதேபோல், 2022- - 23ம் ஆண்டில், 18 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட 2 கோடியே 15 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அண்ணா மறுமலர்சசி திட்டத்தில், 2021- - 22ம் ஆண்டில், 22 அங்கன்வாடி மையங்களுக்கு கட்டடம் கட்ட, 2 கோடியே 77 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயும், 2022- - 23ம் ஆண்டில், 23 அங்கன்வாடி மையங்களுக்கு கட்டடம் கட்ட, 3 கோடியே 12 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்திட்டத்தில், 78 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் பணிகளை செய்து வருகின்றனர்.
இதில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 2021- - 22ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்ததில், ஏழு அங்கன்வாடி மையங்களுக்கு கட்டடம் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. மற்ற பணிகள் நடந்து வருகின்றன.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 2021- - 22ம் ஆண்டில் திட்டமிடப்பட்ட 15 அங்கன்வாடி மையங்களில், மூன்று கட்டடங்கள் கட்டும் பணி முடிந்துள்ளது. மற்ற பணிகள் நடந்து வருகின்றன.
இந்த ஆண்டு, அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மாவட்டத்தில், 106 அங்கன்வாடி மையங்கள் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதில், 78 மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. மேலும், 28 அங்கன்வாடி மையங்களுக்கு கட்டடம் கட்ட, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி, செங்கல்பட்டு.