திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் வள்ளலை பதவியிலிருந்து விடுவித்து கலெக்டர் வினீத் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி விவசாயிகள், அனுமதியின்றி இயங்கும் கல்குவாரி, முறைகேடு குறித்து கனிமவளத்துறையினரிடம் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குவாரி முறைகேடுகள் குறித்து குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மக்கள் அளிக்கும் புகார்மனுக்கள் மீதும், கனிம வளத்துறையினர் நடவடிக்கைகள் எடுப்பதில்லை.
கடந்த, 2022 நவ., 14ம் தேதி, கலெக்டர் அலுவலக ஏழாவது தளத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்தில், கலெக்டர் வினீத் அதிரடி ஆய்வு நடத்தி, அறிவுரைகள் வழங்கினார். ஆனாலும், துறை அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி அளிக்கும்வகையில் இல்லை. இதனால், கனிமவளத்துறை உதவி கமிஷனர் வள்ளலை, பதவியிலிருந்து விடுவித்து கலெக்டர் வினீத் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கனிம வள உதவி கமிஷனர் கண்காணிப்பு அதிகாரியால் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை; மாதாந்திர விவசாயிகள் கூட்டம்; அமைச்சர் நடத்திய ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்கவில்லை.
கனிமவளத்துறை அலுவலகத்தில் சம்பந்தமில்லாமல் ஒரு பெண் இருப்பதாக வைக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளார். இத்தகைய காரணங்களுக்காக, இன்று மதியம் (நேற்று) முதல் உதவி இயக்குனர் பணியிருந்து வள்ளல் நீக்கப்படுகிறார்.
அவருக்கு பதில், புவியியலாளர் (ஜியாலஜிஸ்ட்) சச்சின் ஆனந்த், கூடுதல் பொறுப்பாக மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.