சிவகங்கை : ''மத்திய அரசு அறிவித்தபடி அகவிலைப்படியை, 2023 ஜன., முதல் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது,'' என, சிவகங்கையில், 'ஜாக்டோ ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்., 1 முதல் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது; 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் மாநில அளவில் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 2,366 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றமே
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.இளங்கோவன் கூறியதாவது:
மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை 2023 ஜன., முதல் வழங்கியது. ஆனால் மாநில அரசு ஏப்., 1 முதல் தான் அமல்படுத்துகிறது.
இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 1,500 முதல் 6,000 ரூபாய் வரை கூடுதலாக கிடைக்கும். விலைவாசி உயர்வை ஓரளவிற்கு சமாளிக்கலாம்.
அதே நேரம், மத்திய அரசு போல, 2023 ஜன., முதல் அகவிலைப்படியை அரசு அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. 2022ம் ஆண்டு 6 மாத அகவிலைப்படியை அப்படியே தராமல் நிறுத்திவிட்டது.
இவ்வாறு கூறினார்.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தியாகராஜன் பேசியதாக 'ஆடியோ' ஒன்றை வெளியிட்டார். இது, தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரவை மாற்றத்திற்கும் காரணமானது.
நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பு ஏற்ற பின், அகவிலைப்படி உயர்வை அரசு அறிவித்துள்ளது. அண்ணாமலை வெளியிட்ட ஆடியோவே, அரசு ஊழியர், ஆசிரியர்களின் அகவிலைப்படி உயர்வு கனவை நனைவாக்கியதாகவும் அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.