புதுச்சேரி, 'அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
அவர் நேற்று அளித்த பேட்டி:
உயர்கல்வி சேர்க்கைக்கான கவுன்சிலிங் காலத்துடன் முடிக்கப்பட்டு, கல்லுாரிகள் குறித்த நேரத்தில் துவக்கப்படும். பி.எஸ்சி.,(நர்சிங்) படிப்பை பொறுத்தவரை, இந்தாண்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது, 146 துவக்கப் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதற்கான கோப்பு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வுகளில் தேர்ச்சியை அதிகரிப்பதற்கு, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும், பள்ளிகளை கண்காணிப்பதற்கு புதிய திட்டத்தையும் கொண்டு வர உள்ளோம்.
கடந்த காலங்களில் சென்டாக் சேர்க்கையில் எழுந்த சில குறைபாடுகள் சரி செய்யப்படும். மாணவர் சேர்க்கைக்காக பல்வேறு சான்றிதழ்களை பெறுவதில் உள்ள சிரமத்தை போக்குவதற்கு, சான்றிதழின் எண்ணை தெரிவித்தால் சரி பார்க்கும் வசதியுடன் புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஆசிரியர் இடமாறுதல் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிலர் ஆட்சேபனை தெரிவித்தனர். அவர்களை அழைத்து பேசி, நல்ல முடிவு எடுக்கப்படும். அதன்படி, பள்ளிகள் துவக்கப்படுவதற்கு முன், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவர்.
கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியை கல்வித் துறையுடன் இணைப்பது தொடர்பாக அமைச்சரவையில் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் கிடைத்தவுடன் கல்வி துறையுடன் இணைக்கப்படும்.
பள்ளிகளுக்கான கட்டணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு செய்து கட்டணத்தை இறுதி செய்யும்.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் 127 பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது, 78 பள்ளிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மற்ற பள்ளிகள் தொடர்பாக பரிசீலனை நடந்து வருகிறது. அவையும் விரைவில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்படும். தமிழ் விருப்ப பாடமாக இருக்கும்.
இவ்வாறு, அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
அமைச்சர் நமச்சிவாயம் கூறும்போது, 'புதுச்சேரியில் கள்ளச்சாராயம் கிடையாது. இதுவரை பிடிபட்டதும் இல்லை. புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்படுகிறது. புதுச்சேரியின் எல்லைகளும் கண்காணிக்கப்படுகிறது' என்றார்.