புதுச்சேரி, : இந்த 2023-24 நிதியாண்டில் மேற்கொள்ள வேண்டிய திட்ட பணிகள் (ஒர்க் பிளான்) தயாரிக்க தலைமை செயலர் அறிவுத்தினார். அதன்படி, துறை வாரியாக செயல்படுத்த வேண்டிய திட்ட பணிகள் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை, தலைமை செயலர் ராஜிவ் வர்மா துறை செயலர்களுடன் மறு ஆய்வு செய்யும் பணி நேற்று துவங்கியது.
தலைமை செயலகத்தில் துவங்கிய இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை, சுற்றுலா, ஸ்மார்ட் சிட்டி, தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த திட்டங்கள் குறித்து செயலர் மணிகண்டனுடன் ஆலோசனை நடந்தது.
தொடர்ந்து, உள்ளாட்சி, வருவாய், கலால், தகவல் தொடர்பு துறைகளின் திட்ட பணிகள் குறித்து கலெக்டர் வல்லவனுடனும், தொழில் மற்றும் வணிகத்துறை, கல்வி, துறைமுகம், நிதித்துறை தொடர்பான திட்டங்கள் குறித்து செயலர் ஜவகருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று 19ம் தேதி கால்நடை வளர்ப்பு, வனத்துறை, வேளாண்மை, இந்து அறநிலையத்துறை, சுகாதாரத்துறை, குடிமைப்பொருள் வழங்கல், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, சமூக நலத்துறை, போக்குவரத்து, தொழிலாளர், தீயணைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், திட்ட மற்றும் ஆராய்ச்சி, மின்துறை உள்ளிட்ட துறை திட்ட பணிகள் குறித்தும், 22ம் தேதி குடிசை மாற்று வாரியம், ஆதிதிராவிடர் நலத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, கூட்டுறவு, மீன்வளம், கலை பண்பாட்டு துறை தொடர்பாக ஆலோசனை நடக்கிறது.