மனிதர்களிலேயே குறிப்பிட்ட வகை வாடைகள் உள்ளவர்களைத்தான் கொசுக்கள் நெருங்குகின்றன என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும்.
இப்போது, என்ன வகை சோப்புகளைப் போட்டால், கொசுக்கள் கவரப்படுகின்றன என்பதை அமெரிக்காவில், ஆராய்ச்சி செய்துள்ளனர். 'ஐ-சயன்ஸ்' என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையின்படி, டவ், டயல், சிம்பிள் ட்ரூத் மற்றும் நேட்டிவ் ஆகிய பெயருள்ள சோப்புகளைப் போடுவோரின் துணிகளை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று கொசுக்களை விடுவித்து ஆராய்ந்தனர் விஞ்ஞானிகள்.
இதில், நேட்டிவ் என்ற சோப்பு உபயோகித்தவர் அணிந்த துணி மீது அமர்வதை, பெரும்பாலான கொசுக்கள் தவிர்த்தன. ஆனால், மற்ற மூன்று சோப்புகளை போடக்கூடியவர்கள் அணிந்த துணிகள் மீது பெரும்பாலான கொசுக்கள் அமர்ந்தன.
இதில், நேட்டிவ் சோப்பு தயாரிப்பில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுவது ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மற்ற மூன்று சோப்புகளும், பூக்கள், பழங்கள் ஆகியவை கலந்த மணம் கொண்டவை.
இத்துடன் பாழாய்ப்போன மனித வாடையும் கலந்தால் கொசுக்கள் கும்பலாய் வந்து கும்மியடிக்கத்தான் செய்யும் என்று தெரிகிறது.