புதுச்சேரி : கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்த சம்பவத்திற்கு காரணமான முக்கிய புள்ளிகளை கைது செய்ய வலியுறுத்தி மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாக நேரு எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக நேரு எம்.எல்.ஏ., கலால் அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தார். இதுகுறித்து சட்டசபையிலும் பேசினார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்துள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து நேரு எம்.எல்.ஏ., நேற்று கலால் அதிகாரிகளை சந்தித்தார்.
அப்போது அவர், நீங்கள் எரிசாராயம் பிடித்ததாக செய்திகள் வருகிறது. ஆனால், குற்றவாளி பற்றி எந்த தகவலும் வராதது குறித்து கேட்டு வாக்குவாதம் செய்தார்.
பின்னர், புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு கள்ளச்சாராயம் கடத்துவது யார் என்று தெரிந்தும் நடவடிக்கை எடுப்பதில்லை.
அதனைக் கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.