மரக்காணம், : மரக்காணம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களும் கூண்டோடு வேறு சரகத்திற்கு மாற்ற தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளதால் போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பம் மீனவ கிராமத்தில் கடந்த 13ம் தேதி இரவு மீனவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அங்கு விற்கப்பட்ட கள்ளச்சாராயம் குடித்ததில் மயங்கி விழுந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர், பிம்ஸ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் சேர்த்தனர் இதில் சிகிச்சை பலனின்றி 13 பேர் இறந்தனர்.
மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மரிய சோபி மஞ்சுளா, சப் இன்ஸ்பெக்டர்கள் தீபன், சீனிவாசன், மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், ஏட்டு மகாலிங்கம், தனிப்பிரிவு ஏட்டு ரவி ஆகிய ஏழு பேர் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகளின் வாக்குமூலத்தை ரகசியமாக வைத்துக் கொண்டு அந்த கள்ளச்சாராய வியாபாரிகளிடம் மரக்காணம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த எத்தனை போலீசார் தொடர்பில் இருந்தனர். அவர்களின் மொபைல் எண்களின் கால் ஹிஸ்டரி சேகரிக்கப்பட்டு வருவதாகவும், போலீசாரின் மொபைல் போன்களுக்கு கூகுள் பே உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் பண பரிமாற்றங்கள் நடந்துள்ளதா என்பது குறித்து ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து மரக்காணம் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் கூண்டோடு வேறு சரகத்திற்கு மாற்றும் நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளதால் , இங்கு பணிபுரிந்த அனைத்து போலீசாரும் கலக்கத்தில் உள்ளனர்.