பெங்களூரு-பெங்களூரின் எட்டு மண்டலங்களில் செயல்படுத்த திட்டமிட்ட, 'ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம்' வசதி, 10 முக்கிய சாலைகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில், தலைநகர் பெங்களூரின் எட்டு மண்டலங்களுக்கு உட்பட்ட, 85 முக்கிய சாலைகளில், பெங்களூரு மாநகராட்சியின் கட்டுப்பாட்டில், 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
இது தொடர்பாக, 'சென்ட்ரல் பார்க்கிங் சேவர்ஸ்' என்ற அமைப்புடன், 10 ஆண்டுகளுக்கு மாநகராட்சி ஒப்பந்தமும் செய்துள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு 31.56 கோடி ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்டது.
இத்திட்டப்படி, 2020 செப்டம்பர் 19ம் தேதி சென்ட்ரல் பார்க்கிங் சேவர்ஸ் நிறுவனம், எம்.ஜி., சாலை, கன்னிங்ஹாம் சாலை, ரெசிடென்சி சாலை.
கஸ்துாரிபா சாலை, ரிச்சென்ட் சாலை, மியூசியம் சாலை, விட்டல் மல்லையா சாலை உட்பட 85 முக்கிய சாலைகளில் 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம் செயல்படுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், எம்.ஜி., சாலை உட்பட 10 முக்கிய சாலைகளில் மட்டுமே இச்சேவை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
நகர சாலைகள் 'ஏ', 'பி', 'சி' என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பார்க்கிங் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
'ஏ' பிரிவில் உள்ள கார்களுக்கு 30 ரூபாய்; இரு சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாய்; முறையே, 'பி' பிரிவுக்கு 20 ரூபாய்; 10 ரூபாய்; 'சி' பிரிவுக்கு 10 ரூபாய், 5 ரூபாய் என திட்டமிடப்பட்டது. ஆனால், முக்கியமான 10 சாலைகளை தவிர, வேறு எங்கும் வாகன நிறுத்தும் முறை அமல்படுத்தப்படவில்லை.
மீதமுள்ள 75 சாலைகளில் 'ஸ்மார்ட் பார்க்கிங்' தொடங்குவதற்கு அந்த அமைப்பு ஆர்வம் காட்டவில்லை.
தற்போது நடைமுறையில் உள்ள இடங்களிலும் போதிய பராமரிப்பு இல்லை. மேலும் மாநகராட்சிக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை. கட்டட விதியின்படி, ஒவ்வொரு குடியிருப்பு, வணிக கட்டடங்களிலும் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். ஆனால், நகரில் உள்ள சுமார் 28 லட்சம் கட்டடங்களில், 80 சதவீதம் கட்டடங்களில் பார்க்கிங் வசதி இல்லை.
பல பகுதிகளில் நடைபாதை, சாலையின் ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. குறுகிய சாலைகளில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாதசாரிகள் நடப்பதற்கு இடமும் இல்லை.
குத்தகை ஆர்வமின்மை
மாநகராட்சியின் எட்டு மண்டலங்களின் 723 சாலைகளில் கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் முறைக்கான 'டெண்டர்'களை பெற, குத்தகை நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. இதனால், ஒப்பந்ததாரர்கள் யாரும் டெண்டரை எடுக்க முன்வரவில்லை.
இரண்டாவது முறையாக சில விலக்குகளுடன், மீண்டும் டெண்டர் கோரப்பட்டது. ஆனால், டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், மூன்றாவது முறையாக டெண்டர் கோர முடிவு செய்துள்ளதாக, மாநகராட்சியின் போக்குவரத்து பொறியியல் பிரிவின் பொறியாளர்கள் தெரிவித்தனர்.
எம்.ஜி., சாலையில் அமைக்கப்பட்டுள்ள 'ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம்' - கோப்பு படம்