சேலம்: ''தரமான பால், பால் பொருட்களை குறித்த நேரத்தில் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,'' என, அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சேலம் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வாடிக்கையாளருக்கு தரமான பால், பால் பொருட்களை குறித்த நேரத்தில் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில், 30 ஆயிரத்து, 500 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், லட்சக்
கணக்கான உறுப்பினர்கள், விவசாயிகள், ஆவினில் பணிபுரியும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களின் வாழ்வாதாரம், பால், அதன் பொருட்களை சார்ந்தே உள்ளன. உண்மையான வெண்மை புரட்சியை நிறைவேற்றி காட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பால் பண்ணை வளாகத்தில், 150 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையத்தை பார்வையிட்டார். 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை வாகன சேவையை தொடங்கி வைத்தார். 5.83 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பால் வளத்துறை கமிஷனர் சுப்பையன், சேலம் கலெக்டர் கார்மேகம், எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், அருள் பங்கேற்றனர்.