ப.வேலுார்: வடமாநில தொழிலாளர்கள் மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவத்தில், நான்கு பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்ததால், கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அடுத்த, ஜேடர்பாளையத்தை சேர்ந்த விவேகானந்தர் மனைவி நித்யா, 28. இவர் மார்ச், 11ல் ஆடு மேய்க்க சென்றபோது கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அப்பகுதிகளில், பல்வேறு தீ வைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த, 13 நள்ளிரவு, 1:00 மணிக்கு ஜேடர்பாளையம் அருகே, சரளைமேட்டில் முத்துசாமி என்பவரின் கரும்பாலையில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள், நான்கு பேர் சிமென்ட் அட்டையால் தடுக்கப்பட்ட அறையில் துாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், சிமென்ட் அட்டையை உடைத்து உள்ளே புகுந்து, துாங்கிக் கொண்டிருந்த வட
மாநில தொழிலாளர்களான ராஜேஷ், 19, சுகிராம், 28, எஸ்வந்த், 18, கோகுல், 23, ஆகிய நால்வர் மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் படுகாயமடைந்த நால்வரையும் மீட்டு, கரூர் மாவட்டம், காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபர் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு உயிரிழந்தார். மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இறந்த வாலிபரின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள், கதறி அழுதனர். பின், கரூர் மின் மயானத்தில் உடலை தகனம் செய்தனர். மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த வழக்கை, தற்போது கொலை வழக்காக மாற்றி ஜேடர்
பாளையம் போலீசார்
விசாரணையை தீவிரப்
படுத்தி உள்ளனர்.