ராசிபுரம்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மோசடி செய்ததாக கூறி, கட்டட மேஸ்திரி தனது குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமகிரிப்பேட்டை அடுத்த ஒடுவன்குறிச்சியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; கட்டட மேஸ்திரி மற்றும் கான்ட்ராக்டர். இவரது மனைவி ஷகிலா, 25; இவர் சிட்டாள் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு, 3 வயதில் மகன்
உள்ளார்.
ஓசூரில் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., சாத்தானுக்கு, 27 லட்சம் ரூபாய் மதிப்பில், 3 மாடியில் சதீஷ்குமார் வீடு கட்டிக்கொடுத்துள்ளார். கட்டட வேலை முடியும் சமயத்தில், சாத்தான் பணம் தராததால், சதீஷ்குமார் மனைவியின் தாலி, செயின் மற்றும் நிதி நிறுவனத்தில் கடன் என, 10 லட்சம் ரூபாய் வாங்கி வீட்டை கட்டி முடித்துள்ளார்.
ஆனால், சாத்தன் இதுவரை செலவு செய்த, 10 லட்சம் ரூபாயை திருப்பி தரவில்லை எனக்கூறப்படுகிறது. பலமுறை கேட்டும் கிடைக்காததால், ஓசூர் போலீசில் புகாரளித்துள்ளார். நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
பண நெருக்கடி அதிகமாகவே சதீஸ்குமார் மற்றும் தனது, 4 மாத கர்ப்பிணி மனைவி ஷகிலா உள்ளிட்ட இருவரும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர். அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து, தம்பதியர் கூறுகையில், 'ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சாத்தான், 10 லட்சம் ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். எனக்கு கடன் கொடுத்தவர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதனால், குடும்பத்துடன் தற்கொலை செய்வது தவிர வேறு வழியில்லை' என வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரிக்க, சாத்தானின் மொபைல் எண்ணுக்கு அழைத்தபோது, அவர் எடுக்கவில்லை.