பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வலி, அவர்களின் கஷ்டத்தை மேலும் அதிகமாக்குகிறது. இயற்கை அளிக்கும் இந்த வலியை தடுக்க முடியாது. ஆனால், சில வழிகள் மூலம் சமாளிக்கலாம். உங்கள் மாதவிடாய் வலியை போக்க, வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் உதவும். இவை மாதவிடாய் வலியை குறைப்பதுடன், அந்த நேரத்தில் ஏற்படும் மனநிலை மாற்றத்தையும் எதிர்கொள்ள உதவும்.
இஞ்சி டீ
அனைத்து வீட்டுகளிலும் இருக்கக்கூடிய இஞ்சில், மாதவிடாய் காலத்தில் உதவக்கூடிய பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மேலும், இதிலுள்ள ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் வயிற்றின் வீக்கம் குறையவும், வீக்கம் ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் இடித்த இஞ்சி சிறிதளவு, மிளகு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் புதினாவை தட்டி சேர்த்து, 1 கப் அளவுக்கு தண்ணீர் வற்றியதும் வடிகட்டி இறக்கவும். பின்னர், சிறிதளவு எலும்பிச்சை சாறு, நாட்டுச்சக்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
செலரி ஜூஸ்
![]()
|
செலரி ஒரு கீரை வகை. பார்ப்பதற்கு கொத்தமல்லி போன்று இருக்கும் இது உடலுக்கு பல ஆரோக்கியம் பலன்களை அளிக்கக்கூடியது. இதில் வைட்டமின் ஏ, டி, ஈ, கே மற்றும் பி சத்துக்கள் உள்ளன. இதிலுள்ள மெக்னீசியம் வலியை குறைக்க உதவுகிறது. செலரியை தண்டுடன் சேர்த்து அரைத்து வடிகட்டி குடிக்கலாம்.
பப்பாளி ஜூஸ்
பப்பாளி பழத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதிலுள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் மினரல்கள், மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைக்க உதவும். இதன் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் வீக்கத்தை குறைக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள பெண்களுக்கும் பப்பாளி ஜூஸ் உதவும்.
நன்கு பழுத்த பப்பாளி பழத்தை மிக்சியில் போட்டு, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு, நாட்டுச்சர்க்கரை சேர்த்து, அரைத்து சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து குடிக்கலாம். இது தசைகளை தளர்த்தி, வலியை குறைக்கும்.
கேரட் ஜூஸ்
![]()
|
மாதவிடாய் சுழற்சியின் போது இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். இதனால் சில பெண்களுக்கு ரத்த சோகையும் உண்டாகும். கேரட்டில் உள்ள இரும்புச்சத்து, இழந்த சத்தை மீட்கவும் அதிகரிக்கவும் செய்யும். இதிலுள்ள வைட்டமின் ஏ ரத்த ஓட்டத்தை சீராக்கும். கேரட்டில் பொதுவாகவே இனிப்புத்தன்மை இருப்பதனால், சர்க்கரை சேர்க்காமல் நாட்டுச்சக்கரை சேர்த்து குடிக்கலாம்.
சோம்பு டீ
மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்கும் பண்புகள் சோம்புக்கு அதிகம் உண்டு. இது வீக்கத்தை குறைக்க உதவும். மேலும் தசை பிடிப்புகளையும் நீக்கும். தண்ணீரில் சோம்பை போட்டு கொதிக்க விட்டு, வடிகட்டி குடிக்கலாம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
அன்னாச்சி ஜுஸ்
அன்னாச்சி பழத்தில் எண்ணற்ற ஆரோக்கிய பலன்கள் உள்ளன. இதிலுள்ள வைட்டமின் பி, சி மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அன்னாசி ஜூஸ் உங்களுக்கு புத்துணர்வு அளிப்பதோடு வயிற்றுப் பிடிப்பையும் குறைக்க உதவும்.
கெமோமில் டீ
![]()
|
சீமைச் சாமந்தி அல்லது கெமோமில் ஒரு மருத்துவ குணம் கொண்ட பூவாகும். இது உங்கள் நரம்புகளை லேசாக்கி, உங்களுக்கு நல்ல தூக்கம் வரச் செய்யும். சோர்வு, அலர்ஜி, வீக்கம் போன்றவற்றை தடுக்க உதவும். இதிலுள்ள கிளைசின் எனப்படும் வேதிப்பொருள் தசைப்பிடிப்பை போக்கி நிவாரணம் வழங்கும். மாதவிடாய் வழியிலிருந்து விடுபட கெமோமில் டீ உங்களுக்கு உதவும்.
பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, கெமோமில் டீ பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து குடிக்கலாம். அனைத்து சூப்பர் மார்க்கெட்களிலும், ஆன்லைனிலும் கிடைக்கிறது.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன், ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் இதர வைட்டமின்கள் உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியவை. பீட்ரூட் சாறு ரத்த ஓட்டத்தை ஊக்குவித்து தசைப்பிடிப்பை குறைக்கிறது. இதிலும் இனிப்புத்தன்மை இருப்பதால், இனிப்புக்கு எதுவும் சேர்க்க தேவையில்லை.