லோக்சபா தேர்தலிலேயே தி.மு.க.,வை வீழ்த்துவோம். நம்முடைய ஆளாக அமைச்சர் தியாகராஜன் அங்கே இருக்கிறார்.அவர் பேசிய ஆடியோவை, தொடர்ச்சியாக மக்களிடம் சேர்க்க வேண்டும்' என, சென்னையில் நேற்று முன்தினம் நடந்த, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளதாக தெரிகிறது.
பழனிசாமி பேசியுள்ளதாவது:
முதல் கட்டமாக கட்சியை பலப்படுத்த வேண்டும். அதற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும் எனக் கூறி இருந்தேன். ஆனால், பல மாவட்டச் செயலர்கள், அதை முழுமையாக செய்யவில்லை. இப்படி இருந்தால், செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தான் ஆக வேண்டும்.
அதேபோல், பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஆதிதிராவிட சமூகத்தவர், பெண்கள் என எல்லாரும் இடம்பெறக் கூடிய, 'பூத் கமிட்டி' அமைக்க வேண்டும். கட்சி உணர்வோடு பாடுபடக் கூடியவர்களை, பூத் கமிட்டியில் நியமிக்க வேண்டும்.
இனி லோக்சபா தேர்தலை நோக்கித் தான், நம் சிந்தனை இருக்க வேண்டும். அதற்காக தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். ஒவ்வொரு பகுதிக்கு வரும்போதும், அந்த பகுதியே எழுச்சி மிகுந்ததாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள பிரச்னைகளை, பட்டியல் எடுங்கள். உங்கள் அளவிலேயே, அந்த பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதாக இருந்தால் நடத்துங்கள்.
பெரிய பிரச்னை
தேவையானால், நானே வருகிறேன். இனி ஒவ்வொரு நாளும், தி.மு.க., அரசு நிம்மதியாக காலம் தள்ளக் கூடாது. மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், தன்னுடைய குடும்பத்துக்காக மட்டுமே உழைக்கிறார்.
கோடி கோடியாக மக்கள் வரிப்பணத்தை சுரண்டுகின்றனர். இதை அவர்களுடன் இருக்கும், அமைச்சர் தியாகராஜனே சொல்லி உள்ளார். அது தான் நம்முடைய விமர்சனத்துக்கான பிடிமானம்.
அவரது ஒப்புதல் வாக்குமூல ஆடியோ, உலகம் முழுக்க பரவி இருக்கிறது. ஆடியோ பதிவில் பேசியது அவர் தான். எனவே, அவரது துறையை மாற்றி உள்ளனர். நம்முடைய ஆளாக, அங்கிருந்து தியாகராஜன் பணியாற்றுகிறார். அதனால், அவரது பேச்சு அடங்கிய ஆடியோ பதிவை, ஒவ்வொருவரும் மக்களிடம் தொடர்ச்சியாக சேர்க்க வேண்டும்.
தி.மு.க.,வினர் பற்றியும், அரசு செயல்பாட்டின் அவலம் பற்றியும், மக்களிடம் சொல்ல வேண்டும். இதை ஒழுங்காக செய்தாலே, மக்கள் வெகுண்டெழுவர். லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்துவர். ஒரு வாரத்துக்கு முன் நடந்தேறிய கள்ளச்சாராய சாவுகள், தமிழகத்தில் சமீப காலங்களில் நடக்காதவை.
அமைச்சருடன் இருக்கும் நபரே, சாராய மொத்த வியாபாரியாக இருக்கிறார். இந்த தகவல் வெளிவந்த பின்னரே, நடவடிக்கை எடுக்கிறது அரசு. இதை நாம் சும்மா விடப் போவதில்லை. கவர்னரிடம் சொல்வோம். தமிழகத்தில் நம் தலைமையில் வலுவான கூட்டணி அமையும். அதற்கான சாதகமான சூழல்கள் அமைந்துள்ளன. இவ்வாறு பழனிசாமி பேசியுள்ளதாக தெரிகிறது.
'அவசரப்பட்டு எந்த முடிவும் கூடாது!'-
மாவட்ட செயலர்கள் கூட்டம் துவங்குவதற்கு முன், முக்கியத் தலைவர்களிடம் பழனிசாமி பேசி உள்ளார். அப்போது, கே.பி.முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் சிலர், 'கர்நாடா சட்டசபைத் தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ., தோல்வி அடைந்திருக்கிறது.
அதனால், அவர்கள் இனிமேல் கூட்டணி கட்சியினரை, மிரட்ட முடியாது. 'பா.ஜ., சொல்லும் அனைத்து விஷயங்களையும் நாம் கேட்க வேண்டியதில்லை. காங்கிரசுக்கு மட்டுமல்ல, நமக்கும் சாதகமான முடிவைத் தான் கர்நாடக மக்கள் தந்துள்ளனர் என்பதை, நாம் வெளிப்படையாக சொல்ல வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.
அதற்கு பதிலடியாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசி உள்ளதாவது:அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டியதில்லை. நமக்கான முக்கியத்துவம், பா.ஜ.,விடம் கிடைக்கும். டில்லி சென்றபோது, உள்துறை அமைச்சர் அமித் ஷா கவுரவமாக நடத்தினார். அ.தி.மு.க.,வின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்.
அதனால், அவசரப்பட வேண்டியதில்லை. கர்நாடகாவில் பா.ஜ., தோற்று விட்டது என்பதற்காக, பலவீனமான கட்சியாகி விடாது. பார்லிமென்ட் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தான் இருப்பார். அவரைச் சொல்லித் தான் தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்கு எதிராக எதை சிந்தித்தாலும், அது நமக்கு பாதமான சூழலைத் தான் ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் பேசியுள்ளார். - நமது நிருபர் -