பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 24ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் செல்லும் வழியில் சந்தைப்பேட்டை மைதானம் அருகே, மகா மாரியம்மன் கோவில்களில், பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்மாதம், 21ம் தேதி திருவிளக்கு வழிபாடு, பேரொளி வழிபாடு, கோமாதா வழிபாடு, அடியார்கள் காப்பணிதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. காலை 10:00 மணிக்கு முளைப்பாலிகை ஊர்வலத்தை வரவேற்றல், தீர்த்த குடங்கள், விமான கலசங்கள் ஊர்வலம், மதியம் நடக்கிறது. இரவு, முதலாம் கால யாக வேள்வி நடக்கிறது.
வரும் 22ம் தேதி திருமஞ்சனம், 108 வகையான காய்கனி பூஜை உட்பட வேள்வி மலர் வழிபாடு, திருமுறை இசைத்தமிழ் நிகழ்ச்சி நடக்கிறது. 23ம் தேதி விமான கலசம் நிறுவுதல், கன்னிமூல விநாயகர், துர்க்கை அம்மன், திருச்சுற்று மூர்த்திகளுக்கு எண் வகை மருந்து சாத்துதல், இரவு 7:00 மணிக்கு மகா மாரியம்மனுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. 24ம் தேதி காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது.
விழாவை, சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆகியோர் தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து திருக்கல்யாணம் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.