பெங்களூரு: கர்நாடக முதல்வர் யார் என, காங்கிரஸ் கட்சியில் நிலவிய அரசியல் குழப்பம் நேற்று முடிவுக்கு வந்தது. சித்தராமையா முதல்வராகவும், சிவகுமார் துணை முதல்வராகவும் நாளை பதவி ஏற்கின்றனர். பெங்களூரு கன்டீரவா மைதானத்தில், பதவியேற்பு விழா நடக்கிறது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில், 135 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, முதல்வர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, காங்., மாநிலத் தலைவர் சிவகுமார் போட்டியிட்டனர்.
இருவரின் ஆதரவாளர்களும் தங்களது தலைவர்களுக்கு தான், முதல்வர் பதவி வேண்டும் என, வலியுறுத்த துவங்கினர்.
முதல்வர் பதவி குறித்து ஆலோசிக்க, டில்லிக்கு வரும்படி இருவருக்கும் கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது. 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை, மூன்று நாட்கள் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மேலிடத் தலைவர்கள், இருவரிடமும் பல சுற்று பேச்சு நடத்தினர்.
அப்போது இருவரும் தங்களுக்கு, முதல்வர் பதவி வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தனர். இறுதியாக, நேற்று முன்தினம் சித்தராமையா, சிவகுமாரிடம், ராகுல் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கொடுக்க, சிவகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
'எனக்கு தரவில்லை என்றால், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொடுங்கள்' என்று, ஆட்டத்தை திருப்பி விட்டார். சிவகுமாரின் பிடிவாதத்தால், ராகுல் திகைத்து போனார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, கட்சியின் பொதுச் செயலர் வேணுகோபால், கர்நாடகா காங்., பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் நீண்ட நேரம், சித்தராமையா, சிவகுமாரிடம் ஆலோசனை நடத்தினர்.
சோனியா சமாதானம்
ஆயினும், சிவகுமார் இறங்கி வர மறுத்து விட்டார். கடைசி அஸ்திரமாக,வெளியூர் பயணத்தில் இருந்த சோனியாவுக்கு வேணுகோபால், 'வீடியோ கால்' செய்து, சிவகுமாரை பேச வைத்தார்.
அப்போது சோனியா, 'சித்தராமையா நம் கட்சியின் மூத்த தலைவர். இது அவருக்கு கடைசி தேர்தல். முதல்வராக இருந்தபடி, அரசியலில் ஓய்வு பெற நினைக்கிறார்.
'முதல் இரண்டரை ஆண்டுகள் அவர் முதல்வராக இருக்கட்டும். நீங்கள் துணை முதல்வராக இருங்கள். அதன்பின், கண்டிப்பாக உங்களை முதல்வர் ஆக்குகிறோம்' என, உருக்கமாக கூறியுள்ளார்.
'ராஜஸ்தான் மாதிரி இங்கும் ஆகிவிட்டால், என்ன செய்வது?' என, சிவகுமார் தயங்கியபடியே கேட்க, 'அது மாதிரி நடக்காது. நான் உத்தரவாதம் தருகிறேன். உங்களுடன் நான் இருக்கிறேன். துணை முதல்வர் பதவியும், உங்களுக்கு விருப்பப்பட்ட துறைகளையும் பெற்று கொள்ளுங்கள்.
'மாநில தலைவராகவும் நீங்களே இருங்கள். அடுத்த ஆண்டு நடக்கும், லோக்சபா தேர்தலிலும் நாம் வெற்றி பெற வேண்டும். உங்கள் உழைப்பு பற்றி, எனக்கும் தெரியும்' என, சோனியா கூறியுள்ளார்.
* நாளை பதவி ஏற்பு
சோனியாவே பேசியதாலும், அவர் தந்த வாக்குறுதியாலும், சிவகுமார் தன் பிடிவாதத்தை தளர்த்தினார். சித்தராமையா முதல் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக பதவி வகிக்க, சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று காலை மல்லிகார்ஜுன கார்கேவை, சித்தராமையாவும், சிவகுமாரும் சந்தித்து பேசினர். அப்போது, இருவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, காங்., பொதுச் செயலர் வேணுகோபால் அளித்த பேட்டியில், ''கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இருவரும் 20ம் தேதி பதவி ஏற்பர். சிவகுமார் மட்டும் தான் துணை முதல்வர்; வேறு யாரும் துணை முதல்வர் இல்லை,'' என்றார்.
சிவகுமார் கூறுகையில், ''கட்சி மேலிடம் சொன்னதை கேட்டு உள்ளேன். இன்று பெங்களூரு செல்கிறேன். இரவு 7:00 மணிக்கு எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். நாளை நான் டில்லி வர வாய்ப்பு உள்ளது. யாருக்கு அமைச்சர் பதவிகள் என்பதை, மேலிடம் முடிவு செய்யும்,'' என்றார்.
* கன்டீரவா மைதானம்
அறிவிப்பு வெளியான பின், முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள், பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நேற்று மும்முரமாக நடந்தன.
நேற்று மாலை டில்லியில் இருந்து, தனி விமானத்தில் புறப்பட்ட சித்தராமையா, சிவகுமார் மாலை, 6:23 மணிக்கு பெங்களூரு, எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களுக்கு, பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின், குயின்ஸ் ரோட்டில் உள்ள, கட்சி அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபை காங்., தலைவராக சித்தராமையா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, நேற்று இரவு கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க சித்தராமையா உரிமை கோரினார்.
நாளை மதியம் 12:30 மணிக்கு, முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் பதவியேற்கின்றனர். அமைச்சர்கள், வேறோரு நாளில் பதவியேற்பர் என தெரிகிறது. இந்த விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.
கவர்னருடன், பரமேஸ்வர் சந்திப்பு
ராஜ்பவனில், நேற்று மாலை கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் சந்தித்து பேசினார். அப்போது காங்கிரசுக்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதால், ஆட்சி அமைக்க அழைக்கும்படி கோரிக்கை விடுத்தார். அதற்கான கடிதத்தையும் கொடுத்தார்.
எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை
சிவகுமாரின் சகோதரர் சுரேஷ் டில்லியில் அளித்த பேட்டியில், ''துணை முதல்வராக சிவகுமார் பதவி ஏற்பதில், எங்களுக்கு முழு மகிழ்ச்சி இல்லை. அவர் முதல்வர் ஆக வேண்டியவர். கட்சிக்காக விட்டு கொடுத்து உள்ளோம். எங்களுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது,'' என்றார்.
சித்து முகத்தில் புன்னகை இல்லை
கர்நாடகா முதல்வராக அறிவிக்கப்பட்டாலும், சித்தராமையா முகத்தில் புன்னகை இல்லை. இதற்கு காரணம் ஐந்து ஆண்டுகள், முதல்வராக இருக்க முடியாது என்பது தான். நேற்று காலையில் இருந்து, கடுகடுவென இருந்தார்.
விமான நிலையத்தில் இருந்து, குமரகிருபா சாலையில் உள்ள தன் இல்லத்துக்கு, அரசு காரில் சென்றார்.
பரமேஸ்வர் முரண்டு
முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் பெங்களூரில் நேற்று கூறியதாவது:
எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தே ஆக வேண்டும். ஒருவர் மட்டுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பது சரியல்ல. அனைத்து சமுதாயங்களுக்கும், முக்கியத்துவம் தரவேண்டும். எனக்கும் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும். நானும் கூட இந்த பதவியில் இருந்தவன்தான். அனைவரின் தலைமையால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
13 முறை பட்ஜெட் தாக்கல் செய்த சித்து
கர்நாடகாவின் 24வது முதல்வராக நாளை பதவியேற்கும் சித்தராமையா, மாநிலத்தில் 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.கர்நாடக மாநிலம், மைசூரின் வருணா அருகே உள்ள, சித்தராமஹுண்டி கிராமத்தில், 1947 ஆகஸ்ட் 3ல் பிறந்தவர் சித்தராமையா. குருபர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பி.எஸ்சி., முடித்ததும், மைசூரு பல்கலையில் சட்டம் முடித்து, வக்கீலாக பணியாற்றினார். பாரதிய லோக் தள் என்ற கட்சியில் சேர்ந்து, 1983 சட்டசபை தேர்தலில், மைசூரின் சாமுண்டீஸ்வரி தொகுதியில் வெற்றி பெற்று, சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது, அவருக்கு வயது 36.
பின், ஜனதா கட்சியில் சேர்ந்தார். 1985 தேர்தலில், சாமுண்டீஸ்வரி தொகுதியில் வெற்றி பெற்றவர், ராமகிருஷ்ண ஹெக்டே அமைச்சரவையில் கால்நடை, போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றினார். ஜனதா கட்சி இரண்டாக உடைந்த போது, தேவகவுடாவுடன் ம.ஜ.த.,வுக்கு வந்தார்.
தேவகவுடா அமைச்சரவையில் நிதி அமைச்சர், துணை முதல்வர் பதவிகளை வகித்தார். தேவகவுடாவுடன் ஏற்பட்ட மோதலால், 2005ல் ம.ஜ.த.,வில் இருந்து வெளியேறினார். தனி கட்சி துவங்கி, பின், காங்கிரசில் இணைந்தார்.அப்போது, மாநிலத்தில் நடந்த பா.ஜ., ஆட்சியில், கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்ட, ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக பாதயாத்திரை நடத்தி, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார். இதன் பலனாக, 2013 சட்டசபை தேர்தலில், காங்., ஆட்சிக்கு வந்தது.
மாநில முதல்வராவார் என கணிக்கப்பட்ட, அப்போதைய காங்., தலைவர் பரமேஸ்வர், தோற்று விட்டதால், சித்தராமையாவை முதல்வர் பதவி தேடி வந்தது. கர்நாடகாவில் தேவராஜ் அர்ஸுக்கு பின், 40 ஆண்டுகள் கழித்து, ஐந்து ஆண்டு முதல்வர் பதவியில் இருந்தவர் இவர் தான்.தற்போது, மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார். இதுவரை 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமையும் சித்தராமையாவுக்கு உண்டு.
சித்தராமையாவின் மனைவி பார்வதி, இரண்டு மகன்கள். மூத்த மகன் ராகேஷ், 2016ம் ஆண்டு, தன் 38 வயதில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இரண்டாவது மகன் யதீந்திரா, வருணா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., என்பது குறிப்பிடத்தக்கது. - நமது நிருபர் -
காங்கிரசின் 'ஆபத்பாந்தவன்' சிவகுமார்
ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவின் தொட்டா ஆலஹள்ளி கிராமத்தில் 1962 மே 15ல் பிறந்தவர் சிவகுமார். ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர். காங்கிரசின் மாணவர் பிரிவில், 18 வயதில் சேர்ந்தார். அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். கடந்த 1985 சட்டசபை தேர்தலில், சாத்தனுார் தொகுதியில் தோல்வி அடைந்தார். 1989 தேர்தலில், அதே தொகுதியில் வெற்றி பெற்றார். 1991ல், பங்காரப்பா தலைமையிலான காங்., அரசில் சிறைத்துறை அமைச்சர் பதவி வகித்தார். 1999 தேர்தலில், சாத்தனுார் தொகுதியில், முன்னாள் முதல்வர் குமாரசாமியை தோற்கடித்தார்.
எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சரவையில், 2002ல் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும், 2013ல் சித்தராமையா அரசில் மின் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2018ல் அமைந்த காங்., - ம.ஜ.த., கூட்டணி அரசில், நீர்வளத் துறை மற்றும் மருத்துவக் கல்வி துறை அமைச்சரானார்.
இந்த அரசு ஓராண்டில் கவிழ்ந்தது. இதன்பின், 2020 ஜூலை 2ல் காங்., மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போதே, '2023 தேர்தலில் காங்., கட்சியை ஆட்சியில் அமர்த்துவேன்' என சபதம் செய்தார். அதை நிறைவேற்றிய திருப்தியில், நாளை துணை முதல்வராக பதவியேற்கிறார்.
வழக்குகள்
கடந்த 2002ல், மஹாராஷ்டிரா முதல்வராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக்கின் அரசை காப்பாற்ற, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை, கர்நாடகாவின் பிடதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் பாதுகாத்தார். இதனால், தேஷ்முக்கின் அரசு தப்பியது.இதுபோன்று, 2017ல் குஜராத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், 42 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை, பிடதி சொகுசு விடுதியில் பாதுகாத்ததால், அத்தேர்தலில் காங்கிரசின் அஹமது படேல் வெற்றி பெற்றார்.இதையடுத்து, 2017ல் சிவகுமார், அவரது சகோதரரின் வீடு, அலுவலகங்கள், டில்லி, பெங்களூரு, மைசூரு, கனகபுரா ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் சோதனை நடத்தினர்.
வருமானத்துக்கு மீறி சொத்துக்கள் குவித்ததாகவும், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குகளும் இவர் மீது தொடரப்பட்டன. இவ்வழக்குகள் தொடர்பாக அவரும், அவருக்கு ஆதரவாக இருந்தவர்களும் கைது செய்யப்பட்டு டில்லி திஹார் சிறையில் 45 நாட்கள் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமினில் உள்ளார். அமலாக்கத் துறை, சி.பி.ஐ., விசாரணையை சந்தித்து வருகிறார்.
சிவகுமாருக்கு, 1993ல் திருமணம் நடந்தது. மனைவி உஷா. ஐஸ்வர்யா, அபர்ணா என இரு மகள்கள் உள்ளனர்.