திண்டிவனம்: திண்டிவனம் - புதுச்சேரி பைபாசில், மேம்பாலம் அமைந்துள்ள சர்வீஸ் சாலையில் தனியார் பஸ்கள் வராததால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் மிக முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது.
இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது.
சாலையில், எறையானுார், தென்கோடிப்பாக்கம், அருவாப்பாக்கம், புள்ளிச்சப்பள்ளம் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் வாகனங்கள் கீழ் பகுதிக்குச் சென்று திரும்பும் வகையில் சர்வீஸ் ரோடு மற்றும் பஸ் நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமப் புறங்களில் இருந்து தினமும் ஏராளமானோர், திண்டிவனம் மற்றும் புதுச்சேரி பகுதிக்கு பஸ்களில் வந்து செல்கின்றனர்.
இவர்கள் பஸ் ஏறுவதற்காக சர்வீஸ் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறுவதுவழக்கம்.
ஆனால், சில மாதங்களாக தனியார் பஸ்கள் அந்த சர்வீஸ் சாலை வழியாக சென்று பயணிகளை ஏற்றுவது கிடையாது. இதற்கு மாறாக, மேம்பாலத்தின் மேல் பகுதியிலேயே நின்று பயணிகளை ஏற்றுகின்றனர்.
இதனால் பயணிகள், சுற்றிக்கொண்டு, மேம்பாலம் மேல் பகுதிக்கு வந்து பஸ் ஏற வேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, தனியார் பஸ்கள் அதற்குண்டான இடத்தில் நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.