உடுமலை:உடுமலையில், கட்டப்பட்ட நடைமேம்பாலத்தை திறக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, மக்களின் அவதிக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை அமைந்துள்ளது. இங்கு, மதுரை, திண்டுக்கல், கோவை, பாலக்காடு மற்றும் தென்மாவட்டங்களிலிருந்து தினமும், ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், ஏராளமான சுற்றுலா வாகனங்களும், சரக்கு வாகனங்களும் உடுமலை வழியாக செல்கின்றன. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும்.
இந்நிலையில், உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில், வேகமாக வரும் வாகனங்களால், அவர்கள் பொள்ளாச்சி ரோட்டை கடக்க முடியாமல் தவிப்புக்குள்ளாகின்றனர். குறிப்பாக, பெண்கள், முதியவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் பொள்ளாச்சி ரோட்டில் நடைமேம்பாலம் கட்டப்பட்டது.
இதன் வாயிலாக, தங்களது சிரமங்கள் குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கட்டி முடிக்கப்பட்டு, பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பயணியரின் அவதி முடியாமல் தொடர்கதையாக உள்ளது.
அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், நடைமேம்பாலத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.