சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

நிர்வாணம் - நீங்கள் அறியாத ரகசியம்!

Added : மே 19, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
மகான்களைப் பற்றிய புத்தகங்களைப் படிக்கையில், 'நிர்வாணம்' என்ற வார்த்தை அடிக்கடி தட்டுப்படுகிறது. பொதுவாக வசீகரமான வார்த்தையாக இருந்தாலும், ஞானிகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கச் கூச்சமாக இருக்கிறதே...? 'நிர்வாணம்' பற்றி சத்குருவிடம் கேட்டபோது...சத்குரு:நிர்வாணம் என்றால், அம்மணம் என்று நீங்கள் அர்த்தம் கற்பித்துக் கொண்டதால் வந்த குழப்பம் இது.சமாதி நிலையைக்
Nirvana - The Secret You Dont Know!  நிர்வாணம் - நீங்கள் அறியாத ரகசியம்!

மகான்களைப் பற்றிய புத்தகங்களைப் படிக்கையில், 'நிர்வாணம்' என்ற வார்த்தை அடிக்கடி தட்டுப்படுகிறது. பொதுவாக வசீகரமான வார்த்தையாக இருந்தாலும், ஞானிகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கச் கூச்சமாக இருக்கிறதே...? 'நிர்வாணம்' பற்றி சத்குருவிடம் கேட்டபோது...

சத்குரு:

நிர்வாணம் என்றால், அம்மணம் என்று நீங்கள் அர்த்தம் கற்பித்துக் கொண்டதால் வந்த குழப்பம் இது.

சமாதி நிலையைக் குறிக்கும் மிகப் பொருத்தமான வார்த்தை அது. நிர்வாணம் என்றால், இல்லாதிருப்பது. அதுதான் ஒவ்வொரு ஆன்மீகத் தேடலின் இலக்கு.

சமாதி என்றால்?

'சமா' என்றால் அமைதி, வேறுபாடுகளற்ற நிலை, சாந்தம் என்று பல அர்த்தங்கள் சொல்லலாம். 'தி' என்பது புத்தியைக் குறிக்கிறது.

ஒரு கல்லை உடைக்க விரும்புகிறீர்கள். இது கல், இது கை என்று பிரித்துப் பார்க்கத் தெரியாவிட்டால், உங்கள் விரலை உடைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மனநலம் குன்றி இருப்பவர்கள் தங்கள் உணவை வாய்க்கு எடுத்துப் போவதற்குக் கூடக் கஷ்டப்படுவது எதனால்? வாய் எது, கை எது, உணவு எது என்று பகுத்து அறிய இயலாததால்தான்!

எனவே, பகுத்துப் பார்த்துப் பிழைத்திருக்க புத்தி தேவைப்படுகிறது.

ஆனால், மதங்கள் என்ன சொல்கின்றன? இது வேறு, அது வேறு அல்ல. எல்லாம் ஒன்றே! அதுவே கடவுள் என்கின்றன. எல்லாம் ஒரே சக்திதான் என்று விஞ்ஞானமும் அடித்துச் சொல்கிறது.

எல்லாம் ஒன்றே என்று வார்த்தைகளால் சொல்லிக் கொண்டு இருப்பதோடு நிற்காமல், அதை அனுபவபூர்வமாக உணர முற்படுவதே ஆன்மீகத் தேடல்!

புத்தி இருந்தால் பிரித்துப் பார்க்கத் தோன்றுகிறது. புத்தியை இழந்துவிட்டால், எது, என்ன என்ற பாகுபாடு இல்லாது போகிறது. எல்லாம் ஒன்றாகத் தோன்றுகிறது. அப்படியானால், மனநலம் குன்றியவர்கள் கடவுளை உணர்ந்துவிட்டவர்களா? இல்லை. தங்கள் அனுபவத்தின் மேன்மையைப் புரிந்து கொள்ளும் திறன் அவர்களுக்கு இல்லை.

அப்படியானால், அந்த மேன்மையான நிலையை அடைய புத்தி வேண்டுமா? வேண்டாமா?


புத்தியைத் தேவையான அளவு வைத்துக் கொண்டு, அதே சமயம் அதன் பிரித்துப் பார்க்கும் தன்மையைத் தாண்டிப்போகும் பெரும் அனுபவமே சமாதி நிலை. இதை வார்த்தைகளில் வர்ணிக்கப் பார்ப்பது முழுமையாக இருக்காது.

சீனாவில் ஒரு ஜென் குரு இருந்தார். அவர் மிகச்சிறந்த ஓவியர். இதைக் கேள்விப்பட்ட பேரரசன் அவரை அரண்மனைக்கு வரவழைத்து, "உங்கள் ஓவியம் என் அரண்மனையை அலங்கரிக்க வேண்டும்" என்று விண்ணப்பித்தான்.

"எனக்கென்று தனியே ஓர் அறை வேண்டும்" என்றார் குரு.

சகல வசதிகளுடன் ஓர் அறையை அரண்மனையில் அவருக்கு ஒதுக்கினான் அரசன்.

அடுத்தடுத்த மாதங்களில், ஓவியம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்று பார்க்கப் போனான்.

குரு ஒரு சின்னக்கோடு கூட இழுத்திருக்க வில்லை.

"மூன்று வருடங்கள் என்னைத் தொந்தரவு செய்யாமல் தனிமையில் விடு" என்றார் குரு.

பேரரசன் வேறு வழியின்றிச் சம்மதித்தான்.

மூன்று வருடங்கள் முடியும் நாள் வந்தது. அடக்க முடியாத ஆவலுடன் அரசன் ஓவிய அறைக்குச் சென்றான்.

மொட்டையாக ஒரு பாதையை வரைந்திருந்தார் ஜென் குரு.

அரசனுக்கு மிக ஏமாற்றமாக இருந்தது. "பாதை என்றால் அது அரண்மனைக்கோ, கோயிலுக்கோ, தோட்டத்துக்கோ சென்றடைய வேண்டும். ஓவியத்தை அப்படிப் பூர்த்தி செய்திருந்தால், அழகாக இருந்திருக்குமே? இந்தப் பாதை எங்கே செல்கிறது என்றே புரியவில்லையே?" என்று அரசன் பொறுமையின்றிக் கேட்டான்.

ஜென் குரு புன்னகைத்தார். அந்தப் பாதையில் நுழைந்தார். மறைந்தார். திரும்பி வரவே இல்லை.

இப்படிப் பிரபஞ்சத்துடன் உயிர் ஒன்றிக் கலப்பதுதான் சமாதி நிலை. ஞானப்பாதையில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் எட்ட நினைக்கும் நிலை, சமாதி நிலை.

மிதக்கும் சோப்புக் குமிழ் தனக்கென ஒரு வடிவத்துடன் தனித் தன்மையுடன் பறக்கிறது. ஆனால், அது உடைந்து போனதும் அத்தனை நேரம் அதனுள் இருந்த காற்று எங்கே என்று உங்களால் குறிப்பிட்டுக் காட்ட முடிவதில்லை அல்லவா?

உடல் என்னும் கருவிக்குள் பூட்டி வைத்திருக்கும் உயிரும் அப்படித்தான்! அதை விடுவித்து படைப்புடன் இரண்டறக் கலந்திடச் செய்யும் உன்னத நிலையை எட்டுவதுதான் சமாதி நிலை.

'இதற்கு எதற்காக சாதனைகள் செய்ய வேண்டும்? கழுத்தை வெட்டினால் போயிற்று' என்று சுலபமாக யோசிக்கத் தோன்றும். உடலைச் சிதைத்தால், உயிரைச் சுமக்கும் திறனை அது இழக்கும். உயிர் பிரியும். உண்மைதான். ஆனால், இது சமாதி நிலை அல்ல. தற்கொலை!

அப்படியானால், சமாதி நிலை?

உடலை இம்மியளவும் சிதைக்காமல், வீட்டிலிருந்து வெளியில் காலெடுத்து வைப்பதுபோல், வெளிவிடும் மூச்சோடு சேர்ந்து உயிரும் உடலைவிட்டு வெளி நடந்து, ஒன்றுமில்லாததுடன் இரண்டறக் கலக்கும் நிலைதான், மகா சமாதி. இதைத் தாங்கள் விரும்பிய கணத்தில் அமைத்துக் கொள்பவர்கள், மகான்கள்.

முக்தி, மோட்சம், நிர்வாணம் என்பதெல்லாம் இந்நிலையைக் குறிக்கும் வேறுவேறு வசீகரமான சொற்கள்.

இது நீங்கள் அறிய விரும்பிய ரகசியம்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

ARCOT SRINATH - Chennai,இந்தியா
28-மே-202306:45:44 IST Report Abuse
ARCOT SRINATH நர் என்றொல் நில் அல்லது ஒன்றுமில்லை என்று பொருள். வானா என்றொல் ஆசை என்று பொருள் . நிர்வாண என்றொல் ஆசைகள் அற்றவன் என்று பொருள்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
22-மே-202317:36:15 IST Report Abuse
DVRR அருமையான எளிமையான விளக்கம்
Rate this:
Cancel
மகாலிங்கம், கோவை மிகவும் அருமை சத்குரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X