கர்நாடகா காங்., மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா: கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி, அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நினைக்கும் அனைத்து கட்சிகளும் இதில் பங்கேற்கலாம்.
டவுட் தனபாலு: அரசியலமைப்பு சட்டத்துக்கு, இப்ப என்ன ஆபத்து வந்துடுச்சு... அது பாட்டுக்கு, தன் கடமையை செவ்வனே செய்துட்டு தான் இருக்குது... நீங்க தான், பதவியேற்பு விழாவுக்கு கூட்டம் கூட்டி, அடுத்த லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போடுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பத்திரிகை செய்தி: தமிழக வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை, சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு, துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவரது மாற்றத்தை ரத்து செய்வது தொடர்பாக, முதல்வரின் செயலர்களுடன், அவர் பேச்சு நடத்தி வருவதாக தெரிகிறது. இதனால், அமைச்சர் உத்தரவுப்படி, பணியில் இருந்து விடை பெறாமல், வேளாண் துறை இயக்குனர் பணியை அண்ணாதுரையே கவனித்து வருகிறார்.
டவுட் தனபாலு: தனி ஒரு நபரை நம்பி, எந்த அமைப்பும், துறையும் இயங்கக் கூடாது என்பதற்காகத்தானே, இதுபோன்ற இடமாறுதல்கள் போடுறாங்க... அதை மறந்துட்டு, 'இந்த அதிகாரி தான் வேண்டும்' என, அடம் பிடிப்பது, மூத்த அரசியல்வாதியான பன்னீர்செல்வத்துக்கு அழகா என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., அலுவலக அறிக்கை: தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நாள் முதல், தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தி.மு.க., ஆட்சியின் முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை கோரி, அ.தி.மு.க., சார்பில், வரும், 22ம் தேதி பொதுச் செயலர் பழனிசாமி தலைமையில் பேரணியாக சென்று, கவர்னரிடம் மனு அளிக்கப்படும்.
டவுட் தனபாலு: இதே பேரணி, மனு குடுக்கிற வைபவங்களை, அ.தி.மு.க., ஆட்சியில், எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினும் நடத்தினாரே... அப்ப, அந்த அரசு மேல கவர்னர் என்ன நடவடிக்கை எடுத்தாருன்னு யாருக்கும், 'டவுட்' வரலையா... அதனால, இந்த வேகாத வெயில்ல வெட்டியா நடக்கணுமான்னு உட்கார்ந்து யோசியுங்க!