திருத்தணி,:திருத்தணி ஒன்றியம் சின்னகடம்பூர் ஊராட்சியில், சர்வே எண் 185/3ல் உள்ள 5 ஏக்கர் நிலத்தை, அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயிடம், ஆதிதிராவிடர் நலத்துறையினர், 2021ம் ஆண்டு, 70 லட்சம் ரூபாய் கொடுத்து கையகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, ஆதிதிராவிடர் நலத்துறையினர், அந்த நிலத்தில், 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கினர்.
இந்த இலவச வீட்டுமனைகளை திருத்தணி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் வழங்கியதாக கூறப்படுகிறது.
இலவச வீட்டுமனை பெற்றவர்களில் ஒருவர் கூட சின்னகடம்பூர் ஊராட்சி, மோட்டூர் அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் இல்லை.
மாறாக, வெளியூர் பயனாளிகளை தேர்வு செய்து, முறைகேடாக இலவச வீட்டுமனைகள் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று சின்னகடம்பூர் ஊராட்சியைச சேர்ந்த பழங்குடியின மக்கள் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்ரத்பேகத்திடம் புகார் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இலவச வீட்டுமனை வழங்கப்பட்ட பயனாளிகள் பட்டியலில், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கு கூட இலவச பட்டா வழங்கப்படவில்லை.
மேலும், வசதி படைத்தவர்களுக்கும், வெளி நபர்களுக்கும் முறைகேடாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, முறைகேடில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த எங்கள் பகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் ஹஸ்ரத்பேகம் கூறினார்.