பெங்களூரு,-''வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, பெண்களுக்கு மட்டும் தான் மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும்,'' என்று, காங்கிரசின் தேர்தல் அறிக்கையை தயாரித்த, குழுவின் துணைத் தலைவரான பேராசிரியர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
'ஒவ்வொரு வீட்டிற்கும், 200 யூனிட் இலவச மின்சாரம். குடும்ப தலைவியருக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, பி.பி.எல்., எனும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் வைத்திருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, மாதம் 10 கிலோ இலவச அரிசி.
'அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை' என, ஐந்து முக்கிய திட்டங்களை தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் வெளியிட்டது. இந்த அறிவிப்புகள் காங்கிரசை வெற்றி பெற வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
நிதி நிலை திவால்
'இந்த திட்டங்களை, காங்கிரசால் நிறைவேற்ற முடியாது. அப்படி நிறைவேற்றினால் மாநில அரசின் நிதி நிலை திவால் ஆகும்' என்று, பா.ஜ., கூறி வருகிறது. ஐந்து திட்டங்களை நிறைவேற்ற, ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனாலும், 'ஐந்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் பெறப்படும்' என்றும் காங்கிரஸ் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், காங்கிரசின் தேர்தல் அறிக்கையை தயாரித்த குழுவின் துணைத் தலைவரும், பேராசிரியருமான ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
நிறைவேற்ற முடியும்
காங்கிரசின் ஐந்து திட்டங்களையும் செயல்படுத்த, ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஆகாது என்று, என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஐந்து திட்டங்களையும் செயல்படுத்த முடியாது என்ற எண்ணம், சில காங்கிரஸ் தலைவர்களிடமே உள்ளது.
ஆனால், ஐந்து வாக்குறுதிகளையும், கண்டிப்பாக நிறைவேற்ற முடியும். இதில் எங்கள் குழு உறுதியாக இருக்கிறது. கர்நாடகா அரசின் மொத்த பட்ஜெட், 3 லட்சம் கோடி ரூபாய். பொருளாதார வருவாயில், குறைந்தபட்சம் 60 சதவீதம் வளர்ச்சிக்கு செலவிடப்படுகிறது.
பணக்காரர்களுக்கு இல்லை
ஐந்து திட்டங்களில், 'அன்னபாக்யா' திட்டம் ஏற்கனவே உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட, 7 கிலோ அரிசி, பா.ஜ., ஆட்சியில், 5 கிலோவாக குறைக்கப்பட்டது.
தற்போது, 10 கிலோவாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக நெல் சாகுபடியை ஊக்குவிக்கிறோம்.
'சோலார் கிளஸ்டர்'
கர்நாடகா மின் உபரி மாநிலம். மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கிறோம். காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், 5,000 மெகாவாட் திறன் கொண்ட, சோலார் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு கிராமத்திலும் சிறிய 'சோலார் கிளஸ்டர்' அமைக்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, பெண்களுக்கு மட்டுமே மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும். பணக்காரர்களுக்கு கிடையாது.
அனைத்து பெண்களும் பஸ்களில் பயணிப்பது இல்லை. பெண்களுக்கு பஸ்சில் இலவசம் என்ற அறிவிப்பால், ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், பயன் அடைவர். காங்கிரசின் ஐந்து திட்டங்களும், மக்களுக்கு அதிகாரம் அளிக்க தான். இலவசங்கள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.