உடுமலை:கொப்பரை கொள்முதலுக்கு தரமற்ற சாக்குப்பை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், 'தினமலர்' செய்தி எதிரொலியால், சாக்குப்பை சப்ளையில் முன்னேற்றம் தென்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக, கொப்பரை கொள்முதல் நடந்து வருகிறது.
விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் கொப்பரையை அடைத்து வைக்க, விற்பனைக்கூட நிர்வாகத்தினர் பயன்படுத்தும் சாக்குப்பை தரமற்றும், கிழிந்தும், தையல் விட்ட நிலையிலும் இருப்பதாக சர்ச்சை கிளம்பியது.
இதனால், 'அதில் இருப்பு வைக்கப்படும் கொப்பரை சேதமடையும்' என விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்.
கொப்பரையை 'நாபெட்' எனப்படும் தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு கொள்முதல் செய்யும் நிலையில், ஒரு சாக்குப்பைக்கு, 91 ரூபாய் தொகையும் ஒதுக்கீடு செய்துள்ளது.
'ஆனால், 20, 30 ரூபாய் மதிப்புள்ள சாக்குப்பை கூட பயன்படுத்தப்படுவதில்லை' என்ற புகார் எழுந்தது. இதுதொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் விளைவாக தரமான சாக்குப்பை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி மற்றும் 'நாபெட் நிறுவனத்தின் மாநில தலைமை அலுவலகம் வாயிலாக, மார்க்கெட் கமிட்டிக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
அவ்வகையில், தற்போது ஓரளவு தரமான சாக்குப்பை பயன்படுத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட விற்பனைக்கூட நிர்வாகிகள் கூறியதாவது: சாக்குப்பை சப்ளை செய்யும் பொறுப்பேற்றுள்ள 'கான்ட்ராக்ட்' நிறுவனத்தினர், சமீப நாட்களாக ஓரளவு தரமான சாக்குப்பை அனுப்புகின்றனர்.
அவை, 'முழு தரமானது' என சொல்வதிற்கில்லை என்ற போதிலும், ஓரளவு தரமான சாக்குப்பை சப்ளையாகிறது. அவ்வாறு, சப்ளையாகும் சாக்குப்பை தரமற்றதாக இருந்தால், அதையும் மாற்றி கொடுக்கின்றனர்,' என்றனர்.