மும்பை : புழக்கத்தில் உள்ள, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக, மத்திய ரிசர்வ் வங்கி நேற்று அதிரடியாக அறிவித்தது. அதேநேரம், மக்கள் தங்கள் வசம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள, வரும் 23ம் தேதி முதல் செப்., 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 நவ., 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.இதையடுத்து, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை, மத்திய ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றது.
மக்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது.
கருப்புப் பண பதுக்கலை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. அதன் பின், பொருளாதார சந்தையில் ரூபாய் நோட்டுகளின் தேவையை உடனடியாக பூர்த்தி செய்வதற்காக, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிஅச்சிட்டு வெளியிட்டது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ள இந்த 2000 ரூபாய் நோட்டுகள் கருப்புப் பணமாக பதுக்கப்படுவது அதிகரித்தது. சந்தையில் இந்த நோட்டுகளின் புழக்கம் படிப்படியாக குறையத் துவங்கியது. இது, அரசுக்குகவலையை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை, 2018 - 19ம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி முற்றிலுமாக நிறுத்தியது.
இந்நிலையில், 2000 ரூபாய்நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக மத்திய ரிசர்வ் வங்கி நேற்று அதிரடியாக அறிவித்தது.இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை:
பொதுவான பணப் பரிவர்த்தனைகளில், 2000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் குறைந்து வருவதை தொடர்ந்து கவனித்து வருகிறோம். அதே நேரம், மக்களுக்கு தேவையான பணப் பரிவர்த்னைகளுக்கு இதர மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் தேவையான அளவில் புழக்கத்தில் இருந்து வருகின்றன.
இதையடுத்து, 'கிளீன் நோட் பாலிசி' எனப்படும், ரூபாய் நோட்டு புழக்கத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, 2000 ரூபாய் நோட்டுக்கள் உடனடியாக திரும்ப பெறப்படுகிறது. இந்த ரூபாய் நோட்டுக்களின் வினியோகத்தை உடனடியாக நிறுத்தும்படி வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, பொது மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வரும் 23ம் தேதி முதல் தங்கள் வங்கி கணக்குகளில், 'டிபாசிட்' செய்து கொள்ளலாம்.
அதே போல எந்த வங்கிக் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அதற்கு இணையான மதிப்புடைய வேறு ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். ஒருமுறைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் டிபாசிட் செய்யவும், ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளவும், செப்., 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின், 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த, 2016ல் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, அதை 4 - 5 ஆண்டுகள் புழக்கத்தில் விட மட்டுமே திட்டமிட்டதாக கூறப்படுகிறது. புதிதாக அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் 89 சதவீதத்தை 2017, மார்ச் மாதத்துக்கு முன்பே புழக்கத்தில் விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.
கடந்த 2018, மார்ச் 31ல், 6.73 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களில் இது 37.3 சதவீதம். இதுவே, 2023, மார்ச் 31ல், புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு 3.62 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது. இந்த தகவலை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2016ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அடுத்த நாளில் இருந்தே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும் வரிசை கட்டி நின்றனர்.
இந்தமுறை அவ்வளவு அதிரடி இன்றி, மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை நிதானமாக மாற்றிக் கொள்ளவும், வங்கிகளில், 'டிபாசிட்' செய்யவும், செப்., 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் ஒருமுறைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையில் கரன்சிகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், அதிகபட்சமாக எவ்வளவு, 'டிபாசிட்' செய்யலாம் என்பது குறித்து தெளிவான அறிவிப்பு இல்லை.