செய்யூர்:செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சம்பா, நவரை சாகுபடியில் பொன்னி, பி.பி.டி., குண்டு, என்.எல்.ஆர்., உள்ளிட்ட பல்வேறு ரக நெல் பயிரிடப்பட்டது.
நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, அறுவடை செய்யப்பட்ட நெல், கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
பெரும்பாலான இடங்களில், விவசாயிகள் அறுவடை செய்த நெல், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யப்பட்டு உள்ள நிலையில், தற்போது சட்டத்திற்கு புறம்பான வகையில், இரவு நேரத்தில் தனியார் நெல் வியாபாரிகளிடம் இருந்து, பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத விவசாயி ஒருவர் கூறியதாவது:-
நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்குவதற்கு முன், அறுவடை செய்யப்பட்ட நெல்லை, விவசாயிகள், தனியார் நெல் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.
விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி சேமித்து வைத்த தனியார் நெல் வியாபாரிகள், தற்போது, அரசியல் பிரமுகர்கள் மற்றும் நெல் கொள்முதல் நிலையத்தில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் உதவியுடன், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
தனியார் நெல் வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யும் போது, மூட்டைக்கு 80 முதல் 100 ரூபாய் வரை பெற்று, அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கிட்டுக் கொள்கின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்து, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, அரசு வாயிலாக பணம் செலுத்தப்படும் வங்கி கணக்குகளை பரிசீலனை செய்ய வேண்டும்.
அது மட்டுமின்றி, நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடில் ஈடுபட்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தனியார் நெல் வியாபாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.