கொண்டஞ்சேரி: திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கொண்டஞ்சேரி ஊராட்சி.
இப்பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கால்நடை வளர்ப்பையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை நெடுஞ்சாலையோரம் கட்டி போட்டு மாட்டுத்தொழுவமாக மாற்றியுள்ளனர். இதனால், நெடுஞ்சாலையோரம் கட்டி வைக்கப்படும் கால்நடைகள் சாலையின் பாதி பகுதியில் படுத்து இளைப்பாறுகின்றன.
இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், நெடுஞ்சாலையில் கால்நடை உலா வருவதை தடுக்க உத்தரவிட்ட நிலையில் நெடுஞ்சாலையோரம் உள்ள மாட்டுத்தொழுவத்தை அகற்ற நடவடிக்கை எடுப்பாரா என, வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலையோரம் உருவாக்கப்பட்டுள்ள மாட்டுத்தொழுவத்தை அப்புறப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.