பெங்களூரு,-''ஏழைகள் பக்கம் நின்றதால், வெற்றி பெற்று உள்ளோம்,'' என்று, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் கூறினார்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதவி ஏற்பு விழாவில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் பேசியதாவது:
கர்நாடகா மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. நீங்கள் எல்லோரும் காங்கிரஸ் பக்கம் நின்று உள்ளீர்கள். கடந்த நான்கு ஆண்டுகள் பா.ஜ., ஆட்சியில் கஷ்டத்தை அனுபவித்தீர்கள். தலித், ஆதிவாசிகள், ஏழைகள் பக்கம் நின்றோம். இதனால் வெற்றி பெற்று உள்ளோம்.
மாநில மக்கள் தற்போது, காங்கிரஸ் பக்கம் உள்ளனர். பா.ஜ.,வினரிடம் சொத்து, அதிகாரம், பதவி, இருந்தது. அவர்கள் ஊழல் செய்தனர். ஆனால் எங்களிடம் உண்மை இருந்தது. கர்நாடகா மக்கள் அதிகாரத்தை தோற்கடித்தனர்.
கர்நாடக தேர்தலில் வெறுப்பு தோற்கடிக்கப்பட்டு உள்ளது; அன்பு வென்று உள்ளது. நாங்கள் உங்களுக்கு ஐந்து வாக்குறுதிகளை அளித்தோம். நான் பொய் வாக்குறுதிகள் கொடுப்பவன் இல்லை என்று, உங்களிடம் சொல்லி இருக்கிறேன். சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
இன்னும் சில மணி நேரத்தில் கர்நாடகா அமைச்சரவை கூட்டத்தில், ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒப்புதல் பெறப்படும். இந்த அரசு, கர்நாடகா மக்களின் அரசு.
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல் ஹிந்தியில் பேசியதை, ஹொஸ்கோட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சரத் பச்சேகவுடா கன்னடத்தில் மொழிபெயர்ப்பு செய்தார்.
ராகுலை தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
நாங்கள் கொடுத்த ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற, இன்னும் சில மணி நேரத்தில் நடக்கும், அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும். பா.ஜ., சொல்வது ஒன்று; செய்வது ஒன்று. ஆனால் நாங்கள் அவர்களை மாதிரி இல்லை. என்ன சொல்கிறோமோ அதை கண்டிப்பாக செய்வோம்.
பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானுக்கு பயணம் செய்துவிட்டு திரும்பினால், இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை தடை செய்கிறார். கடந்த முறை ஜப்பான் சென்று வந்த பின்னர் 1,000 ரூபாய் நோட்டை தடை செய்தார்.
இம்முறை 2,000 ரூபாய் நோட்டை தடை செய்தார். நாட்டு மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வேலை செய்கிறார். கர்நாடகா அரசு மக்கள் விரும்பும் அரசு. எல்லோரையும் அரவணைத்து செல்லும் அரசு.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் சித்தராமையா பேசுகையில், ''பதவி ஏற்பு விழாவுக்கு வந்த, அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியில் அளித்த, அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக, இன்னும் சிறிது நேரத்தில் எனது தலைமையில், முதல் அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது,'' என்றார்.
பொதுவாக பதவி ஏற்பு விழாவில், அரசியல் பேச மாட்டார்கள். ஆனால் நேற்று நடந்த பதவி ஏற்பு விழா முடிந்த பின், காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் பேசும் பொதுக் கூட்டமாக மாற்றினர். இதற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.