''விவசாயம் பத்தி எதுவுமே தெரியாதவங்க தான் நிர்வாகம் செய்றாங்க...'' என, சுக்கு காபிக்கு, 'ஆர்டர்' கூறியபடியே அமர்ந்தார் அந்தோணிசாமி.
''வேளாண் துறை விவகாரமா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''ஆமாம்... வேளாண் துறை, அதனோடு தொடர்புடைய பல துறைகளுக்கும், விவசாயமே படிக்காத, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைத் தான் நியமிக்கிறாங்க...
''விவசாய கமிஷனர் தொடங்கி, தோட்டக்கலை, வேளாண் வணிகத் துறை இயக்குனர்னு எல்லாருமே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தான்... முன்னாடியாவது, வேளாண் பொறியியல் துறை, விதை சான்றளிப்பு துறைகளுக்கு மட்டும், அந்தந்த படிப்பு படிச்சவங்களை அதிகாரிகளா போட்டாங்க...
''இப்ப, அதுலயும் மாற்றம் கொண்டு வந்துட்டாங்க... இவங்களுக்கு, அடிமட்ட விவசாயிகளின் பிரச்னைகளை புரிஞ்சுக்க முடியலைங்க... 'ஏசி' அறையில அமர்ந்தபடி, கீழ்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு போடுறதை மட்டுமே செய்றாங்க...
''இப்படி இருந்தா, விவசாயத்தை எப்படி வளர்க்க முடியும்னு, வேளாண் துறையினரே கேள்வி எழுப்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அதிகாரிகள் காட்டுல அடைமழை பெய்யுது பா...'' என்ற, அன்வர்பாயே தொடர்ந்தார்...
''ஈரோடுல சாய, சலவை, 'பிளீச்சிங், பிரின்டிங்' ஆலைகள் நிறைய இருக்குது... இந்த ஆலைகள்ல, 1 யூனிட் கழிவு நீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தை மட்டும் வச்சிருப்பாங்க பா...
''ஆனா, பல யூனிட்கள் அளவுக்கு உற்பத்தி பண்ணிட்டு, அதன் கழிவு நீரை சுத்திகரிக்காம, காவிரியில கலந்துடுவாங்க... இதனால, 1 மீட்டர் துணிக்கு, 3 முதல், 12 ரூபாய் வரைக்கும், ஆலைக்கு லாபம் கிடைக்கும் பா...
''இதை எல்லாம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தான் தடுக்கணும்... இதுக்காகவே, இந்தத் துறையில பறக்கும் படையும் இருக்குது பா...
''ஆனா, இதுல இருக்கிற ஒரு பெண் அதிகாரி, கோவையில இருந்து டூட்டிக்கு வர்றதால, சீக்கிரமே கிளம்பிடுறாங்க... மீதம் இருக்கிற இரண்டு அதிகாரிகள், ராத்திரி ஆலைகளுக்கு ரோந்து போய், கணிசமான தொகையை கறந்துட்டு இருக்காங்க...
''சில ஆலை உரிமையாளர்களே, ஆத்திர அவசரத்துக்கு இந்த அதிகாரிகளிடம் கடன் வாங்குறாங்கன்னா பார்த்துக்குங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''வினோத்குமார், விஜயகுமார் வாங்க... ஒரு வாய் காபி சாப்பிடலாம்...'' என, நண்பர்களை வரவேற்ற குப்பண்ணாவே, ''கமிஷன் பணத்தை ரெண்டு மடங்கா உசத்திட்டா ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு நகர்ந்தார்.
''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''தமிழகத்துல, மலையடிவார பகுதிகள்ல, 475 கிராம ஊராட்சிகள் இருக்கு... இதை எல்லாம், 'ஹாகா' எனப்படும், 'ஹில் ஏரியா கன்சர்வேஷன் அத்தாரிட்டி' பகுதியா அறிவிச்சிருக்கா ஓய்...
''இந்த கிராமங்கள்ல, மனைகள் விற்பனைக்கு வனத் துறையிடம் தடையில்லா சான்று வாங்கணும்... இந்த சான்றிதழ் வழங்க ஏக்கருக்கு, 3 லட்சம் ரூபாய் தான் லஞ்சமா வாங்கிண்டு இருந்தா ஓய்...
''சமீபத்துல, துறையின் தலைமையை மாத்தினாளோல்லியோ... புதியவர் வந்ததும், இதை, 6 லட்சம் ரூபாயா உசத்திட்டார் ஓய்...
''அவருடன் படிச்ச நாமக்கல் டாக்டர் ஒருத்தர் தான், இந்த டீலிங்கை எல்லாம் கவனிக்கறார்... இதுக்கு முக்கிய புள்ளியின் பி.ஏ.,வும் ஒத்தாசையா இருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''ஓகே ரவி, நாளைக்கு சிவராமன் வீட்டு பங்ஷன்ல பார்க்கலாம் பா...'' என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
முதல்வருக்கு நன்றி: புறக்கணித்த அமைச்சர்கள்!
வியர்க்க,
விறுவிறுக்க பெஞ்சில் வந்தமர்ந்த அந்தோணிசாமி, ''நான் நேர்மைக்கு ஓய்வு
கொடுக்கலைன்னு 'ரிட்டையர்' அதிகாரி சொல்றாருங்க...'' என, பேச்சை
ஆரம்பித்தார்.
''கோவை மேட்டரா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஆமாம்...
கோவை மாநகராட்சியில, கட்டடங்கள் கட்டுறதுக்கான அனுமதி தரும், 'பசை'யுள்ள
பதவியை கைப்பற்ற நினைச்ச பெண் அதிகாரி, சென்னையில் இருந்து ஆய்வுக்கு போன
மாநில அதிகாரிக்கு, பணம் கொடுத்து அந்த பதவியை பிடிச்சிட்டாங்கன்னு,
சமீபத்துல பேசினோமே, ஞாபகம் இருக்குதாங்க...
''சமீபத்துல,
'ரிட்டையர்' ஆன அந்த அதிகாரி, இதை மறுத்திருக்காருங்க... 'பதவி உயர்வு
வழங்குற அதிகாரமோ, அதுக்கு பரிந்துரை செய்யுற அதிகாரமோ உள்ள பதவியில நான்
இருந்தது இல்ல... இதையெல்லாம் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இருக்கிற
கூடுதல் இயக்குனர், இயக்குனர், அரசு செயலர் தான் முடிவு செய்வாங்க... பணி
ஓய்வு பெற்ற என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தவறானது'ன்னு
சொல்றாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பதவி உயர்வு கிடைக்காம அல்லாடறா ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''சென்னையில,
கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிக்கற, சி.எம்.டி.ஏ., இருக்கோன்னோ... இங்க,
'டெக்னிக்கல்' பணிகளுக்கு பல்வேறு நிலைகள்ல, 'பிளானர்'களும், நிர்வாக
பணிகளுக்கு அலுவலர்களும் இருக்கா ஓய்...
''அரசு அங்கீகரித்த பணி
விதிகளின்படி, குறிப்பிட்ட கால இடைவெளியில இவாளுக்கு, 'புரமோஷன்'
குடுக்கணும்... ஆனா, கடந்த மூணு வருஷமா இது பத்தி மூச்சு பேச்சே இல்ல
ஓய்...
''அதாவது, 'சீனியர் பிளானர்'களை, 'சீப் பிளானர்'களா பதவி
உயர்வு செய்து போட்ட உத்தரவே நடைமுறைக்கு வர ஆறு மாசம் ஆறதாம்... இவாளுக்கு
கீழ உள்ள மற்ற பிளானர்களுக்கு பதவி உயர்வு, பகல் கனவாகவே இருக்கு ஓய்...''
என்றார், குப்பண்ணா.
''முதல்வருக்கு நன்றி சொல்ற விழாவுல
கலந்துக்காம அமைச்சர்களும், ஆளுங்கட்சியினரும் புறக்கணிச்சிட்டாவ வே...''
என, கடைசி தகவலுக்கு வந்தார் அண்ணாச்சி.
''இதென்ன ஓய் புதுக்கதையா இருக்கு...'' என்றார், குப்பண்ணா.
''திருப்பூர்ல
இருக்கிற நஞ்சராயன்குளத்தை, பறவைகள் சரணாலயமா தமிழக அரசு சமீபத்துல
அறிவிச்சதுல்லா... இதுக்காக, முதல்வருக்கு நன்றி சொல்ல ஆசைப்பட்ட
நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தினர், ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு
செஞ்சாவ வே...
''இந்த நிகழ்ச்சியில, அமைச்சர்கள் சாமிநாதன்,
கயல்விழி, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்ளிட்ட தி.மு.க.,
பிரமுகர்கள் யாரும் கலந்துக்கல... 'நிகழ்ச்சி சம்பந்தமான போஸ்டர்,
அழைப்பிதழ்ல என் பெயர், படத்தை பயன்படுத்தக் கூடாது'ன்னு விழா
குழுவினரிடம், எம்.எல்.ஏ., செல்வராஜ், கறாரா சொல்லிட்டாரு வே...
''அதோட,
'உள்ளூர் கட்சி நிர்வாகிகள் யாரும், விழாவுல கலந்துக்காதீங்க'ன்னும் தடை
போட்டு இருக்காரு... 'முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிற விழாவையே,
புறக்கணிக்கிற அளவுக்கு அப்படி என்னதான் பிரச்னை'ன்னு திருப்பூர்
தி.மு.க.,வினர் மத்தியில விவாதம் அனல் பறக்கு வே...'' என முடித்தார்,
அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.