பெங்களூரு: கர்நாடக முதல்வராக நேற்று பதவியேற்ற சித்தராமையாவும், துணை முதல்வராக பதவியேற்ற சிவகுமாரும் பரஸ்பரம் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் நீங்கள் முதல்வராக பதவியேற்கும்போது, என் மகனுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும்' என, சிவகுமாரிடம், சித்தராமையா 'கண்டிஷன்' போட்டுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வர் பதவிக்காக சித்தராமையாவும், 75, சிவகுமாரும், 61, கடுமையாக மோதினர்; இது, தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல், கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா ஆகியோர் பேச்சு நடத்தியும், இருவரும் பிடிவாதத்தை தளர்த்தவில்லை. இறுதியில் சோனியா தலையிட்டார்.
முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவகுமாரும் முதல்வராக இருக்கும்படி, அவர் ஆலோசனை கூறினார். முதலில் சித்தராமையா முதல்வராகவும், சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்கும்படி சோனியா வலியுறுத்தினார். இதன்பின் இருவரும் பரஸ்பரம் சில நிபந்தனைகள் விதித்து, ஆட்சியை பகிர்ந்து கொள்ள சம்மதித்தனர்.
முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்த சிவகுமார், 'முதல்வருக்கு சமமான அதிகாரம் எனக்கும் வேண்டும். அமைச்சரவையில் என் ஆதரவாளர்களுக்கு அதிகமான இடம் வழங்க வேண்டும். 'அரசில் எந்த முடிவையும், சித்தராமையா தன்னிச்சையாக எடுக்கக் கூடாது. இதை, துணை முதல்வரான என்னிடமும், மற்ற அமைச்சர்களிடமும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்' என, பல நிபந்தனைகளை விதித்துள்ளார்.
அதே போன்று சித்தராமையாவும், சிவகுமாரிடம் ஒரு நிபந்தனை விதித்துள்ளார். 'இம்முறை கோலார் தொகுதியில் போட்டியிட திட்டமிட்ட நான், மேலிடத்தின் உத்தரவின்படி, வருணாவில் களமிறங்கி வெற்றி பெற்றேன். எனக்காக என் மகன் எதீந்திரா, தொகுதியை விட்டுக் கொடுத்தார். 'எனவே, என் பதவி காலம் முடிந்து, சிவகுமார் முதல்வராகும் போது, எதீந்திராவை அமைச்சரவையில் சேர்த்து, அவருக்கு முக்கியமான இலாகாவை ஒதுக்க வேண்டும்' என, அவர் நிபந்தனை விதித்ததாகவும், அதை சிவகுமார் மற்றும் காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக் கொண்டதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பதவியேற்பு விழா
இதற்கிடையே, கர்நாடகாவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில், நேற்று கோலாகலமாக நடந்தது. இந்த விழாவுக்கு நாடு முழுதும் இருந்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வந்திருந்தனர்.
பகல், 12:30க்கு விழா துவங்கியது. சரியாக, 12:40க்கு, சித்தராமையா முதல்வராக பதவியேற்றார். அவர், கடவுளின் பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அவருக்கு, கவர்னர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து சிவகுமார் துணை முதல்வராக பதவியேற்றார்.
இதன்பின், கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவர் பரமேஸ்வரா மற்றும் கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோளி, மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல், பொதுச் செயலர் பிரியங்கா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ஹிமாச்சல் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு உள்ளிட்டோர், இந்த விழாவில் பங்கேற்றனர். முன்னதாக, விழா மேடைக்கு வந்த ராகுல், சித்தராமையா, சிவகுமார் ஆகியோரின் கைகளை துாக்கிப் பிடித்தபடி, பார்வையாளர்களை நோக்கி கையசைத்தார்.
இதன்பின், சித்தராமையாவும், சிவகுமாரும் பெங்களூரில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த சிவகுமார், தலைமைச் செயலகத்தின் படிக்கட்டில் நெற்றியை வைத்து வணங்கினார்.
முதல்வராக பதவியேற்ற சித்தராமையா, துணை முதல்வராக பதவியேற்ற சிவகுமார் ஆகியோருக்கு, பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
கொள்கை அளவில் ஒப்புதல்
பதவியேற்புக்கு பின், பெங்களூரில் உள்ள தலைமை செயலகத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையில், முதல் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், துணை முதல்வர் டி.கே.சிவகுமார், எட்டு அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், தேர்தலில் காங்., அளித்த முக்கிய ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் பின், முதல்வர் சித்தராமையா கூறியதாவது:தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம். அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். முக்கிய ஐந்து வாக்குறுதிகளை செயல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன்படி, 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு 2,000 ரூபாய், 10 கிலோ அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் மற்றும் டிப்ளமா பயின்றவர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை ஆகிய திட்டங்கள் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்த, அரசுக்கு ஆண்டுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில், இது தொடர்பாக விரிவாக விபரங்கள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.