திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகள் விவசாயம் மற்றும் வனத்துறை பகுதியாக உள்ளது.
இந்த கிராமங்களிலிருந்து மறைமலை நகர், எஸ்.பி.கோவில், செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி - கல்லுாரி மாணவர்கள், விவசாயிகள் தினமும் சென்று வருகின்றனர்.
இரவு நேரங்களில் சிறுங்குன்றம், மருதேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு வீடு திரும்புவோர் அச்சத்துடன் செல்வார்கள்.
இப்பகுதி, வனத்துறை சார்ந்த பகுதியாக இருப்பதால், பல நேரங்களில் ஆள் நடமாட்டமும், போக்குவரத்தும் குறைந்து காணப்படும். இரவு 8:00 மணிக்கு மேல் ஆள் நடமாட்டமும், போக்குவரத்தும் குறைவாகவே இருக்கும்.
கடந்த 2022 ஜூலையில், வழிப்பறி திருடர்கள் மருதேரி- - எஸ்.பி.கோவில் தடம் சார்ந்த அரசு பேருந்தில் தங்கியிருந்த ஓட்டுனர், நடத்துனரை தாக்கி பணப்பை, செல்போனை பறித்தனர். அதேபோல் மினி வேனை மடக்கி அதன் ஓட்டுனரை தாக்கி செல்போன், பணம் பறித்தனர்.
எனவே, குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், மருதேரி-- கொண்டங்கி சாலை, சிறுங்குன்றம் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் பகுதி; வெங்கூர்- - சிறுங்குன்றம் இணைப்பு சாலை என, முக்கிய இடங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.