மாமல்லபுரம்: மாமல்லபுரம் விடுதிகளில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள், திரைப்படம்
உள்ளிட்ட படப்பிடிப்புகளுக்கு கட்டணம் வசூலிக்க, பேரூராட்சி மன்றம்
தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், அர்ஜூனன் தபசு, ஐந்து ரதங்கள் உள்ளிட்ட சிற்பங்களை காண, உள், வெளி நாடு சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டதை அடுத்து, இங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
வார இறுதி, அரசு விடுமுறை நாட்களில் மாமல்லபுரத்திற்கு படையெடுக்கும் பயணியர் தேவைக்காக, கடற்கரை பகுதி பெரும் வளாகத்தில், நட்சத்திர சொகுசு விடுதிகள், பிற விடுதிகள் என அதிகரிக்கின்றன.
சென்னை அருகில், இயற்கை கடற்கரை சூழல், நகர போக்குவரத்து நெரிசல் இல்லாதது போன்ற காரணங்களால், விடுதிகளில் ஆடம்பர திருமணம் நடத்துகின்றனர்.
மேலும், கருத்தரங்கம், மாநாடு, தனியார் பெருநிறுவன கேளிக்கை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. குறிப்பிட்ட நாட்கள் என இல்லாமல், ஆண்டு முழுதுமே நடக்கின்றன.
குறிப்பாக ஆங்கில புத்தாண்டு, வார இறுதி நாட்களில், மது விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளை, விடுதி நிர்வாகங்களே நடத்துகின்றன.
திருமணம், மாநாடு போன்ற நிகழ்ச்சிகளிலும், இத்தகைய நிகழ்வுகள் உண்டு. சென்னை தனியார் நிறுவனங்கள், ஊழியர்களை மகிழ்விக்க, இவ்வாறு நடத்துகின்றன.
இது ஒருபுறமிருக்க, பொது இடம், சிற்ப பகுதிகள், கடற்கரை, விடுதி பகுதிகளில், அவ்வப்போது திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரம் என படப்பிடிப்பு நடத்தப்படுகின்றன.
விடுதிகளில் கலை நிகழ்ச்சிகள், பொது இடத்தில் படப்பிடிப்புகள் ஆகியவற்றுக்கு, பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறுவதோ, அதற்கான கட்டணம் செலுத்துவதோ நடைமுறையில் இல்லை.
இந்நிலையில், பேரூராட்சியின் வருவாயை பெருக்க கருதி, விடுதிகளில் கலை நிகழ்ச்சிகள், பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்தவும், பேரூராட்சி நிர்வாகம் அனுமதி பெற வேண்டும் என, மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அனுமதி இல்லாமல், படப்பிடிப்பு நடத்துவதற்கென குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கவும், பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
மற்ற இடங்களை போலவே!
மற்ற சுற்றுலா இடங்களில், கலை நிகழ்ச்சிகள், படப்பிடிப்பு நடத்த, கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிந்தது. அப்பகுதி கட்டண அனுமதி முறைகளை பரிசீலித்து, விதிமுறைகள் வகுத்து, இங்கும் கட்டணம் நிர்ணயிக்கப்படும். பேரூராட்சி அனுமதி பெற்றே அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும்.
- பெயர் குறிப்பிடாத பேரூராட்சி அலுவலர் ஒருவர்