புதுடில்லி, மே 21- 'புதுடில்லியில் அரசு நிர்வாகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், அதற்கு எதிராக மத்திய அரசு புதிய அவசர சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுடில்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர உள்ளது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
சமீபத்தில் அளித்த உத்தரவில், 'சட்டம் - ஒழுங்கு, போலீஸ், நிலம் தவிர மற்ற அனைத்து நிர்வாக அதிகாரமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுடில்லி அரசுக்கே உள்ளது' என, அதில் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு புதிய அவசர சட்டத்தை நேற்று முன்தினம் இரவு அமல்படுத்தியது.
இதன்படி, புதுடில்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக முடிவெடுக்க, தேசிய தலைநகர் சிவில் சர்வீசஸ் ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படுகிறது.
இதன் தலைவராக, புதுடில்லி முதல்வர் இருப்பார். புதுடில்லி தலைமைச் செயலர், முதன்மை உள்துறை செயலர் உள்ளிட்டோர் இதில் இருப்பர்.
அரசு அதிகாரிகள் பணியிடமாற்றம் உள்ளிட்டவற்றில், இந்த ஆணையமே முடிவு செய்யும். இதில், பிரச்னை ஏற்பட்டால், துணை நிலை கவர்னரின் முடிவே இறுதியானதாக இருக்கும்.
இந்த அவசர சட்டத்துக்கு, புதுடில்லி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீர்த்துபோகும் வகையில், இந்த அவசர சட்டம் உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியுள்ளதாவது:தங்களது அதிகாரத்தை பறிக்கும் வகையில், அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ள பா.ஜ.,வின் மீது, புதுடில்லி மக்கள் கோபம் கொண்டுள்ளனர். ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலை விட்டுவிடுங்கள். ஜனநாயக நாட்டில், மக்கள் தான் பெரியவர்கள். தேர்தெடுக்கப்பட்ட அரசைக் காட்டிலும், அதிகாரிகள் சிலருக்குத்தான் அதிகாரம் என்று கூறுவதன் வாயிலாக, மக்களை அவமானப்படுத்தியுள்ளது, இந்த அவசரச் சட்டம்.இதற்காக, வீடு வீடாகச் செல்லப் போகிறேன். மக்களிடம், அவசர சட்டத்தின் துரோகத்தை எடுத்துக் கூறுவேன். அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை மீதே கை வைக்கப்பட்டுள்ளது. இது, உச்ச நீதிமன்றத்தின் மாண்பை அவமதிப்பதாகும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, மத்திய அரசு நிச்சயம் சந்திக்கும். கோடை விடுமுறை முடிந்ததும், அவசர சட்டத்தை எதிர்த்து முறையிடுவோம்.கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான அடியை ஏற்கமாட்டோம். இந்த சட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு, பார்லிமென்டுக்கு வரும்போது, ராஜ்ய சபாவில் நிறைவேற்ற விடவே மாட்டோம். இதற்காக, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் நேரில் சந்திக்கப் போகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.