எத்தனை உயரத்தில் இருந்தாலும் சொந்த மண்ணையும், பிறந்த ஊரையும் மறக்காத 'மண்வாசனை மனிதர்கள்' ஆங்காங்கே இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார், நாடு முழுவதும் கல்வி மையங்களை நடத்தி வரும் 'கல்வி குரூப் ஆப் ஸ்கூல்ஸ்' தலைவர் செந்தில்குமார்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், தற்போது நாடு முழுவதும் 90 கல்வி மையங்கள், மொழித் திறனை மேம்படுத்தும் 'வாய்ஸ் டிரைனிங் ஆப் ரிசர்ச்' மையங்களின் தலைவர், சர்வதேச கல்வியாளர் என பன்முக திறமைகளில் வலம் வருகிறார். இவரை மதுரை நகரி - சோழவந்தான் இடையே பிரமாண்டமாக அமைந்துள்ள கல்வி மையத்தில் சண்டே ஸ்பெஷலுக்காக சந்தித்தபோது…
பிறந்தது மதுரை சோழவந்தான் சின்ன நாச்சிகுளம் கிராமம். படித்தது அரசு பள்ளி. பிளஸ் 2 முடித்தவுடன் கம்ப்யூட்டர் சென்டரில் பகுதி நேர வேலை செய்ய துவங்கி நாடு முழுவதும் கல்வி மையங்களை துவக்கி நடத்தி வருகிறேன்.
இதன் பின்னணியாக நம்புவது நேர்மை, உழைப்பு மட்டுமே. 'ரெகுலர்' வழி உயர்கல்வி படிக்காவிட்டாலும் தொலைநிலை வழியாக பி.எச்டி., உட்பட 23 டிகிரிகள் படித்து கல்வி அறிவை வளர்த்துக்கொண்டேன்
முதலில் 2001ல் என் சொந்த மண்ணான சோழவந்தானில் சிறிய அளவில் கம்ப்யூட்டர் சென்டர் துவக்கி, அடுத்தடுத்து கல்வி மையங்களை உருவாக்கினேன்.
தற்போதைய கல்வி முறையில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரு மாணவர் அதிகபட்சம் பாடம் ரீதியாக 70 புத்தகங்களை தான் படிக்கிறான். பாடத்தை தாண்டி எதையும் படிக்கும் நடைமுறை இல்லை. ஆனால் வெளிநாட்டு கல்விமுறையில் ஒரு மாணவர் குறைந்தது 3 ஆயிரம் புத்தகங்களை படித்து விடுகிறான். அறிவு விசாலமாகிறது.
அந்த முறையை இங்கு சாத்தியப்படுத்தி 'சாமானிய மாணவருக்கும் சர்வதேச கல்வி' என்ற நோக்கத்தில் 2 சர்வதேச பள்ளிகள், சி.பி.எஸ்.இ., 4 நர்சரி பள்ளிகளை துவக்கினேன். அனைத்திலும் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டங்களே. ஒன்றாம் வகுப்பு முதலே தொழில்நுட்பம், ஆராய்ச்சி திறமைகளை கற்பித்தலே எங்கள் கல்வி மையத்தின் நோக்கம். சர்வதேச கல்வி வழங்க கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, மொழித்திறமை, கலாசாரம் போன்றவற்றில் 36 சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள ஒரே கல்வி நிறுவனம், நாங்கள் தான்.
விளையாட்டு துறையில் ஓராண்டில் 192 மண்டல சாம்பியன்கள், 58 மாநில சாம்பியன், 8 மாநில பதக்கம், டேக்வாண்டோவில் 4 சர்வதேச வெற்றிகள் என பல சாதனைகளை கல்விக் குழும மாணவர்கள் குவித்துள்ளனர். 'கல்வி சூப்பர் கிரிக்கெட் டீமும்' பல சாதனைகளை ஏற்படுத்தி வருகிறது.
பொறியியல் மாணவர்களுக்கு பைனல் இயர் புராஜெக்ட் தயாரிப்பிற்கான பயிற்சி அளிக்கிறோம். என்.எஸ்.டி.சி., உட்பட மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து 10 ஆயிரம் பேருக்கு கம்ப்யூட்டர் திறன்சார்ந்த இலவச பயிற்சிகள் அளிக்கிறோம்.
தேனி தேவதானபட்டியில் விளையாட்டு பல்கலை இந்தாண்டு துவங்கவுள்ளோம். பி.எஸ்சி., ஸ்போர்ட்ஸ் கோச்சிங், யோகா படிப்புகள் முதற்கட்டமாக துவங்கும். கிராமப்புற விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வைப்பதே இதன் நோக்கம். தற்போது சென்னை, புதுச்சேரி, ஹரியானா பகுதிகளில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டின் 'டாப் 10' கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறுவதே எங்களின் இலக்கு என்கிறார் இந்த சாதனை நாயகன்.
இவரை 96775 99991ல் வாழ்த்தலாம்.