'புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பிற்கு பின், தங்கம், வெள்ளி வாங்குவது தொடர்பாக அதிக விசாரணைகள் வந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புழக்கத்தில் உள்ள, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக, நேற்று முன்தினம் (மே 19) மத்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது. பொதுமக்கள் வங்கிக் கிளைகளையோ அல்லது ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களையோ மே 23ம் தேதி முதல் அணுகி பரிமாற்ற வசதியைப் பெறலாம். செப்.,30 வரை ஒரே நேரத்தில் ரூ.20 ஆயிரம் வரை மாற்றி கொள்ளலாம். வணிக கணக்குகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கட்டுப்பாடு இல்லாமல், டெபாசிட் செய்து, அதற்கேற்ப ரூபாய் நோட்டுக்களை பெறலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிக தங்கம் நுகர்வில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.60,200 ஆக உள்ளது. கே.ஒய்.சி கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 நாட்களில், 2,000 ரூபாய் நோட்டு அளித்து தங்கம் வாங்குவது குறைவாக உள்ளது.இதனை பயன்படுத்தி, சில நகைக்கடை உரிமையாளர்கள், 5 முதல் 10 சதவீதம் வழக்கமான தங்கத்தில் விலையை விட அதிகமாக, 10 கிராம் தங்கம் ரூ.66 ஆயிரம் வரை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
![]()
|
ஆல் இந்தியா ஜெம் மற்றும் ஜூவல்லரி கவுன்சில் தலைவர் சையம் மெஹ்ரா கூறுகையில், 'நேற்று 2,000 ரூபாய் நோட்டு கொடுத்து, தங்கம் ,வெள்ளி வாங்குவது தொடர்பாக ஏராளமான விசாரணைகள் வந்தன. இருப்பினும்,கே.ஓய்.சி விதிமுறைகள் காரணமாக தங்கம் வாங்குவது குறைவாக உள்ளது. ரிசர்வ் வங்கி, செப்.,30 வரை, சுமார் 4 மாத காலம் வரை ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாமென அவகாசம் அளித்துள்ளதால், தங்கம் வாங்குவதில் தேவையற்ற பீதி இல்லை. ஜி.எஸ்.டி., மற்றும் ஹால்மார்க் கட்டாயம் காரணமாக நகை உற்பத்தியாளர்கள் முறையான வணிகத்தை மேற்கொள்ள ஊக்குவித்து வருகிறது.'
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்றைய தினம், சில நகைக்கடை உரிமையாளர்கள், 2,000 ரூபாய் நோட்டுக்கு எதிராக தங்கத்தை விற்பனை செய்யவில்லை என கூறப்படுகிறது. பலர், கூடுதல் விலைக்கு தங்கத்தை விற்றதாக கூறப்படுகிறது. அதாவது, வழக்கமான விலையை விட 5 முதல் 10 சதவீதம் அதிகமான விலைக்கு தங்கத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. 10 கிராம் தங்கம் ரூ.66 ஆயிரம் வரை விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பி.என்.ஜி ஜூவல்லர்ஸ் தலைவர் சவுரப் கூறுகையில், தங்கத்தை அதிக விலை நிர்ணயித்து, ரூ.2000 நோட்டுகளை எடுக்கும் நடைமுறை, அமைப்பு சாரா துறையில் மட்டும் இருக்கக்கூடிய ஒன்று. ஒழுங்குப்படுத்தப்பட்ட நகை வியாபாரிகள் இதுபோன்ற விஷயங்களிலிருந்து பல கி.மீ தொலைவில் இருக்கிறார்கள்." என்றார்.
காம்டிரெண்ட்ஸ் ஆராய்ச்சி மையத்தின் இணை நிறுவனரும் இயக்குனருமான ஞானசேகர் தியாகராஜன் கூறுகையில், '2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களை , தங்கத்தின் பக்கம் இழுத்து சென்றது. இருப்பினும், இந்த முறை வித்தியாசம் என்னவென்றால், நிறைய இணக்கங்கள் உள்ளன. 2016ல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென மேற்கொண்ட பணமதிப்பிழப்பு சூழல் தற்போது இல்லை. மக்களிடம் 2,000 ரூபாய் நோட்டு குறைவாக உள்ளது. ஏற்கனவே, 2018-19ம் நிதியாண்டில் புதிய நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திவிட்டதால், குறைவாகவே புழக்கத்தில் உள்ளது.'
இவ்வாறு அவர் கூறினார்.
அதிக விசாரணைகள் வந்தாலும், மக்களிடம் தங்கம் வாங்குவதில் அவசரம் இல்லை. நாளை முதல் தங்க விற்பனை அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.2 லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் வாங்க, பான், ஆதார் உள்ளிட்டவை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.