திருப்போரூர்: செங்கல்பட்டில் இருந்து -திருப்போரூர் வரை, தடம் எண் 'டி50' எனும் பேருந்து இயக்கப் படுகிறது. புதிய தடமாக வளர்குன்றம் கிராமத்தில் திரும்பி, முள்ளிப்பாக்கம், ராயமங்கலம், பெரியார் நகர், மானாமதி, ஆமூர், சிறுதாவூர். வழியாக, திருப்போரூர் வரை இயக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, இப்பகுதி மக்கள் கூறியதாவது:
மக்கள் பயன்பெறும் வகையில், கிராம பகுதிகளை இணைக்கும் விதமாக, செங்கல்பட்டு -- திருப்போரூர் பேருந்தை, முள்ளிப்பாக்கம், மானாமதி இடையே இயக்க வேண்டும்.
முள்ளிப்பாக்கம் அருகில் உள்ள சின்னவிப்பேடு, பெரிய இரும்பேடு உள்ளிட்ட கிராம மக்கள், திருப்போரூருக்கு வேலைக்கு செல்கின்றனர்.
முள்ளிப்பாக்கம், பூண்டி, ராயமங்கலம் கிராமப்புற மாணவர்கள், மானாமதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.
பல்வேறு தேவைகளுக்கு செல்லும் மக்கள், நான்கு கி.மீ., துாரம் உள்ள வளர்குன்றம் வரை நடந்தே சென்று, அங்கிருந்து செங்கல்பட்டு - -திருப்போரூர் பேருந்தை பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, கிராமங்களை இணைக்கும் வகையில், முள்ளிப்பாக்கம், ராயமங்கலம், மானாமதி, ஆமூர், சிறுதாவூர் வழியாக. புதிய பேருந்து சேவை துவங்க அரசு முன் வரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.