மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர, அ.தி.மு.க.,சார்பில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமை, முன்னாள் அமைச்சர் உதயகுமார் துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில், 'அ.தி.மு.க., ஆட்சியின் போது, கள்ளச்சாராயம் என்ற பேச்சே இல்லாமல் இருந்தது. கள்ளச்சாராயத்தை தடுத்து வைத்திருந்தோம். ஆனால் இன்று, தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் எனக் கூறி ஆட்சிக்கு வந்தனர். தற்போது கள்ளச்சாராயம் தான் ஆறாக ஓடுகிறது.
'கள்ளச்சாராயத்தை குடித்து பலர் இறந்துள்ளனர்; 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். வீட்டில் இருந்து செல்லும் உழைப்பாளர்கள் உயிரோடு திரும்புவரா என்ற நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.
இதைக் கேட்ட நிர்வாகி ஒருவர், 'கொரோனா காலத்துல நம்ம ஆட்சியில, மாசக்கணக்கில் டாஸ்மாக்கை மூடி வச்சதால தான், கள்ளச்சாராயம் மறுபடியும் தலையெடுத்துச்சு... அதனால, இந்த பாவத்துல நமக்கும் பங்கு உண்டு...' என, அருகில் இருந்த நிர்வாகியிடம் முணுமுணுத்தபடியே நடையை கட்டினார்.