சூலுார்;சூலுார் தாலுகாவில், கருமத்தம்பட்டி உள்வட்டத்துக்கான ஜமா பந்தி நாளை நடக்கிறது.
வருவாய்த்துறை சார்பில் ஆண்டு தோறும் ஜமா பந்தி எனும் வருவாய் தீர்வாயம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கிராம நிர்வாக அலுவலக ஆவணங்கள், கணக்கு விபரங்கள் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும்.
மேலும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகள் காணப்படும். சூலுார் தாலுகாவில் நடப்பு ஆண்டுக்கான ஜமா பந்தி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தலைமையில் நாளை(23ம் தேதி) காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. கருமத்தம்பட்டி உள் வட்டத்துக்கு உட்பட்ட பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், மோப்பிரிபாளையம், கிட்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம், கருமத்தம்பட்டி, கரவழி மாதப்பூர், கணியூர், அரசூர், நீலம்பூர், மைலம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை நாளை அளிக்கலாம்.
மே 24ம் தேதி சூலுார் உள்வட்டத்துக்கு உட்பட்ட, இருகூர், ராசிபாளையம், காடாம்பாடி, காங்கயம்பாளையம், சூலுார், கண்ணம்பாளையம், ஒட்டர்பாளையம், பட்டணம், பீடம்பள்ளி, கலங்கல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்கள் மனுக்களை அளிக்கலாம்.