சென்னை: குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மஸ்தான் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய, முதல்வரை வலியுறுத்தும்படி கோரி, கவர்னர் ரவியிடம் நேற்று இரண்டு மனுக்களை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்தார். அதேநேரத்தில், தி.மு.க., ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அ.தி.மு.க., சார்பில் இன்று சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படுகிறது.
சமீபத்தில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கள்ளச்சாராயம் மற்றும் போலி மது குடித்து, 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது, தி.மு.க., அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அரசின் நிர்வாகத் திறன் சரியில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
பா.ஜ., மகளிர் அணி
இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ., மகளிர் அணி தலைவி உமாரதி மற்றும் நிர்வாகிகள், நேற்று கவர்னர் மாளிகை சென்றனர். அங்கு கவர்னர் ரவியை சந்தித்து, இரண்டு மனுக்கள் அளித்தனர்.
கள்ளச்சாராயம் காரணமாக, 23 பேர் இறந்துள்ளனர். அதற்கு காரணமான சாராய வியாபாரிகளுடன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி, கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல், கடமையில் இருந்து தவறி உள்ளார்.
எனவே, இருவரையும் பதவி நீக்கம் செய்ய, முதல்வரிடம் வலியுறுத்தும்படி மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
கவர்னரை சந்தித்த பின், அண்ணாமலை அளித்த பேட்டி:
கவர்னரிடம் இரண்டு மனுக்கள் கொடுத்துள்ளோம். தமிழகத்தில் நடந்த கள்ளச்சாராய இறப்புகள், கள்ளச்சாராய விற்பனை குறித்து தெரிவித்துள்ளோம்.
டாஸ்மாக் மதுக்கடைகள் எண்ணிக்கையை குறைத்து, அதற்கு பதிலாக வேறு வழியில் வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறைகள் அடங்கிய வெள்ளை அறிக்கையை, 15 நாட்களில் முதல்வரிடம் வழங்க உள்ளோம்.
அ.தி.மு.க., ஆட்சியில், செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, கண்டக்டர் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்தனர்.
அதற்கு பணம் வாங்கிக் கொண்டு, வேலை வழங்காமல் மோசடி செய்ததாக, 2018ல் அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவானது. அவரது தம்பி அசோக், பி.ஏ., சண்முகம், ராஜ்குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டது.
மாநில காவல் துறை விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் குற்றப் பத்திரிகையை ஏற்றது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மின்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார்.
அப்போது சண்முகம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், 'எங்களிடம் பணம் வாங்கியது உண்மை; திருப்பிக் கொடுத்தது உண்மை' என்று மனு தாக்கல் செய்தார்.
குற்றப் பத்திரிகை
இதனால், சென்னை உயர் நீதிமன்றம், 2021 ஜூலை 30ல், அமைச்சர் செந்தில் பாலாஜியை வழக்கில் இருந்து விடுவித்தது; அதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
பணம் வாங்கியதே குற்றம் என்பதால், அமலாக்க துறை நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்தது. தமிழக காவல் துறை இரண்டு மாதங்களுக்குள், கூடுதல் வழக்கை பதிவு செய்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
அதை, தமிழக காவல்துறை பின்பற்றாவிட்டால், சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டி வரும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நடவடிக்கை உள்ளது. அவர் அமைச்சராக இருந்தால், நேர்மையாக விசாரணை நடக்காது.
எனவே, அவரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்கும்படி முதல்வரிடம் கூறும்படி, கவர்னரிடம் மனு அளித்துள்ளோம். அமைச்சர் செஞ்சி மஸ்தான் குறித்தும் மனுவில் தெரிவித்துள்ளோம். தமிழக பா.ஜ., 'கள்'ளை கொண்டு வர உறுதுணையாக; கள்ளுக்கு ஆதரவாக இருக்கும்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
தமிழகத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் குறித்து, விரிவான அறிக்கை தரும்படி, தமிழக அரசுக்கு கவர்னர் ரவி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். அறிக்கை தயாராகி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பேரணி
அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், இம்மாதம், 18ம் தேதி சென்னையில் நடந்தது.
கூட்டத்தில், தி.மு.க., ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று காலை 10:25 மணிக்கு, கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று, மனு அளிக்க முடிவானது.
அதன்படி, கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி தலைமையில் இன்று, சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை பகுதியில் இருந்து ஊர்வலமாக கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னரை சந்தித்து, அ.தி.மு.க.,வினர் மனு அளிக்க உள்ளனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கும் இடையே, ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின் கருத்து வேறுபாடு உருவானது. இரு தரப்பிலும் பரஸ்பரம் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், பழனிசாமி டில்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். அப்போது அண்ணாமலையும் உடனிருந்தார். இந்த சந்திப்புக்கு பின், 'பா.ஜ., உடனான கூட்டணி தொடர்கிறது. அண்ணாமலைக்கும், எனக்கும் இடையே எந்த பிரச்னையும் கிடையாது' என, பழனிசாமி அறிவித்தார். ஆனால், கூட்டணி குறித்து அண்ணாமலை வாய் திறக்கவில்லை.
அதேநேரம் லோக்சபா தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களில் போட்டியிடும் என்று கூறி வருகிறார். இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு, நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. இந்நிலையில், தி.மு.க., ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று, கவர்னரிடம் இன்று மனு அளிக்கப் போவதாக அ.தி.மு.க., தலைமை அறிவித்தது.அதற்கு முன்னதாக, தி.மு.க., அரசை கண்டித்து, பா.ஜ., மகளிர் அணி சார்பில், நேற்று முன்தினம் மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று கவர்னரை சந்தித்தும் மனு அளித்தனர். அடுத்து, விழுப்புரத்தில் மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். அ.தி.மு.க.,வை விட வேகமாக பா.ஜ., செயல்படுவது, அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.