வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதுடில்லி நிர்வாகம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அதற்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணத்தை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. புதுடில்லி நிர்வாக அதிகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.
கவர்னர் முடிவு
'சட்டம் - ஒழுங்கு, போலீஸ், நிலம் தவிர மற்ற அனைத்து நிர்வாகமும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது' என, இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், அரசு அதிகாரிகள் நியமனம், பணியிடமாற்றம் தொடர்பாக, மத்திய அரசு அவசர சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, பணியிட மாற்றம் தொடர்பான பிரச்னைகளில் துணை நிலை கவர்னரின் முடிவே இறுதியானது என்று கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
![]()
|
இந்த அவசர சட்டத்தின் அவசியம் குறித்து அரசு அதிகாரிகள் கூறிஉள்ளதாவது: பல விஷயங்களை ஆய்வு செய்தே, இந்த அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல உலக நாடுகளில், அதன் தேசிய தலைநகரின் நிர்வாகம் தேசிய அரசிடமே உள்ளது. அந்த நகரங்களில் மேயர் தலைமையிலான நிர்வாகமே உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இல்லை.
தேசிய தலைநகர் என்பது, தேசிய அளவிலான முன்னுரிமைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்; உள்ளூர் அரசியலுக்கானதாக இருக்கக் கூடாது. அதுபோல நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் பகுதியாக தேசிய தலைநகர் உள்ளது.
மத்திய அரசு கட்டுப்பாடு:
இங்குள்ள வெளிநாட்டு துாதரகங்கள், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டியுள்ளது. இதனால், தேசிய தலைநகர் நிர்வாகம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே சிறந்ததாக இருக்க முடியும். புதுடில்லி அரசால் தாங்கள் மோசமாக நடத்தப்படுவதாக, புதுடில்லி அரசில் உள்ள பல அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மூத்த அதிகாரிகளின் ஆலோசனைகளும் பெறப்பட்டன. இதன்படியே, அரசு நிர்வாகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.