வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
ஜி.ரங்கராஜன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த, 22 பேர் குடும்பங்களுக்கு, தலா,10 லட்சம் ரூபாய் உதவித் தொகையை, முதல்வர் ஸ்டாலின் நேரில் வழங்கினார் என்ற செய்தியை பார்த்து கொதித்து போனவர்களில், நானும் ஒருவன். உதவித்தொகை வழங்கிய முதல்வரிடம் நான் கேட்க விரும்புவதாவது...
* சில மாதங்களுக்கு முன், கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் ஒருவர், தி.மு.க., கவுன்சிலரால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரின் குடும்பத்திற்கு ஒரு நயா பைசா கூட கருணைத் தொகை வழங்காத நீங்கள், அந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ஆறுதலும் கூறவில்லை
* துாத்துக்குடி மாவட்டத்தில், மணல் மாபியா கும்பலால், முறப்பநாடு வி.ஏ.ஓ., லுார்து பிரான்சிஸ், அவரின் அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். அவரின் குடும்பத்திற்கு உதவித்தொகை அறிவித்த நீங்கள், நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை.
கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நீங்கள், ராணுவ வீரர் குடும்பத்திற்கும், வி.ஏ.ஓ., குடும்பத்திற்கும் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன்?
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினரிடமும், சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினரிடமும் காட்டிய கருணையையும், இரக்கத்தையும், ராணுவ வீரர் மற்றும் வி.ஏ.ஓ., குடும்பத்தினரிடம் காட்டாதது ஏன்?
கொலை செய்யப்பட்ட அந்தக் கடமை வீரர்களுக்கு, நீங்கள் அஞ்சலி செலுத்த தவறியது ஏன்... ஆறுதல் சொல்ல தயங்கியது ஏன்? இந்த இரு நிகழ்வுகளில் இருந்தே, உங்களின் கொடூரபுத்தியும், துரோகச் செயல்களும், திராவிட மாடலின் லட்சணமும் நன்கு விளங்குகிறது!
இப்படியே போனால், நாளை கஞ்சா அடித்து பலியானோர்கள், வங்கி கொள்ளையில் ஈடுபட்டு போலீசாரால் சுடப்பட்டு இறக்கும் கொள்ளையர்கள், போலீஸ் என்கவுன்டரில் பலியாகும் ரவுடிகள், மணல் கொள்ளையர்களின் குடும்பங்களுக்கும், மக்களின் வரிப்பணத்தை உதவித்தொகை என்ற பெயரில், நீங்கள் வாரிக் கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.
![]()
|
ஸ்டாலின் அவர்களே...
உங்களின் குடும்பத்தினரும், உங்களின் கழகக் கண்மணிகளும், மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பது போதாது என்று, நாட்டில் நடைபெறும் கொடூர, தேச விரோதச் செயல்களுக்கும் துணை போகிறீர்கள்; அதற்கு ஆதரவாக கொடி பிடிக்கிறீர்கள். தமிழக மக்கள் அகிம்சாவாதிகள், வன்முறையில் நம்பிக்கையற்றவர்கள் என்பதால், உங்கள் இஷ்டத்திற்கு ஆட்டம் போடுகிறீர்கள்.
இந்தத் தவறுகளுக்கான பலனை நீங்களும், உங்களின் திராவிட மாடல் கழகத்தினரும், உங்களுக்கு துணை போகும் பிற கட்சியினரும் வெகு சீக்கிரம் அனுபவிப்பீர்கள். ஓட்டு போட்ட மக்களின் சாபம் உங்களை சும்மா விடாது.