தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி:
ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது போன்ற முடிவுகளை எடுக்கும் போது, மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டிருக்க வேண்டும். இதுபோன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன், மாநில அரசுகளிடம், முறைப்படி ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் போது, கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பது தான், தமிழக அரசின் நிலைப்பாடு.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:
ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து இருப்பது, மிகவும் வரவேற்கத்தக்கது. எனினும், வங்கி அல்லாத மற்ற இடங்களில், குறிப்பாக டாஸ்மாக், கூட்டுறவு வங்கிகள், முத்திரைத்தாள் விற்பனை போன்றவற்றில், எந்த அளவுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை, ஒரு நபரிடம் இருந்து பெற முடியும் என்பது குறித்து, எந்தவித அறிவிப்பும் வராததால், இதுபோன்ற இடங்களில் அதிகார வர்க்கத்தினர் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.
![]()
|
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
திராவிட மாடல் ஆட்சியில்,10ம் வகுப்பு தமிழ் தேர்வில், 36 ஆயிரம் பேர் தோல்வி. தி.மு.க., நடத்தும் குடும்பப்பள்ளிகளில், போதனா மொழி தமிழ் இல்லை. ஆங்கிலமும், ஹிந்தி மட்டுமே. கழக குடும்ப குழந்தைகள், வெளிமாநிலங்கள், நாடுகளில் படிக்கின்றனர். ஏமாந்தவர்கள், தமிழகத்தின் ஏழை பச்சை தமிழ் மாணவர்கள் மட்டுமே; அந்தோ பரிதாபம்.
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு, 1,021 டாக்டர்களை நியமிக்க, கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. கொரோனா காலத்தில் குறைந்தது, 100 நாட்கள் பணியாற்றிய டாக்டர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. ஆனாலும், டாக்டர்கள் நியமன அறிவிப்பில் அது பற்றி எதுவும்குறிப்பிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.