மதுவிலக்கு: தள்ளாட்டம் ஏன்?| Prohibition: Why the Wobble? | Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

மதுவிலக்கு: தள்ளாட்டம் ஏன்?

Added : மே 22, 2023 | |
மதுவிலக்கு ஒரு சிறந்த கொள்கை. நாட்டிற்கும் வீட்டிற்கும் தனிமனித வாழ்க்கைக்கும் நலம்பயக்கும் கொள்கை என்பது நல்லவர் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை. ஆனால்அதற்காக எடுக்கும் முயற்சி மட்டும் எப்போதும் தோல்வியையே சந்திப்பது ஏன் என்பது விடை காண இயலாத கேள்வி.குடிப்பழக்கம் என்பது உயர்வு, தாழ்வு பாகுபாடின்றி பரவியிருக்கும் நோய். பெருந்தனக்காரன்
Prohibition: Why the Wobble?   மதுவிலக்கு: தள்ளாட்டம் ஏன்?

மதுவிலக்கு ஒரு சிறந்த கொள்கை. நாட்டிற்கும் வீட்டிற்கும் தனிமனித வாழ்க்கைக்கும் நலம்பயக்கும் கொள்கை என்பது நல்லவர் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை. ஆனால்அதற்காக எடுக்கும் முயற்சி மட்டும் எப்போதும் தோல்வியையே சந்திப்பது ஏன் என்பது விடை காண இயலாத கேள்வி.

குடிப்பழக்கம் என்பது உயர்வு, தாழ்வு பாகுபாடின்றி பரவியிருக்கும் நோய். பெருந்தனக்காரன் செல்வச்செருக்கால் குடிக்கத் துவங்கினான். உழைப்பாளி தன் உழைப்பின் களைப்பு தீர குடித்தான். வறியவன் தன் கவலை தீர குடித்தான். இவர்களில் யார் மீதும் பாரபட்சம் காட்டாமல் உயிரைக்குடித்து முடித்தது மது.

தற்கால இளைஞர்கள் விளைவுகள் பற்றி சிந்திக்காமல், தற்காலிக போதைக்காக தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஆதாரமாக இயற்கை அளித்த மதியை மயங்க வைத்து மகிழ்கின்றனர்.

தமிழ் இலக்கியம் மனோன்மணியத்தில் கூறப்படும் நாயைப் போல, காய்ந்து போன வெறும் எலும்பைக் கடித்து, அதன் உடைந்த கூர்மையான பகுதி குத்தியதால் ஈறுகளில் இருந்து கசியும் தன் ரத்தத்தையே எலும்பின் சுவையாக எண்ணி மகிழ்கிறான்மனிதன்.

மனித உடலில் மிகவும் சக்திவாய்ந்த, வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இயற்கை படைத்த உறுப்பு மூளை.

மிகப் பெரிய அளவில் சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய அறிஞர்கள், விஞ்ஞானிகள் கூட தங்கள் மூளையின் சக்தியில் மிக குறைந்த சதவீதத்தையே உபயோகித்திருப்பதாகக் கூறுகிறது அறிவியல்.


அடிமையாக மாட்டார்கள்எனவே, வாழ்க்கையில் சாதிக்கவும், முன்னேறவும் துடிக்கும் எவரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள்.

ஒரு மனிதனின் ஐந்து புலன்களும் விழிப்புணர்வுடன் இருந்து ஓட்ட வேண்டிய எந்திர வாகனங்களை மது அருந்தி விட்டு மயங்கிய நிலையில் ஓட்டி, மரணத்தை தழுவியவர்கள் பலர்; அப்பாவி உயிர்களை பறித்தவர்கள் பலர்.

கள்ளத்தனமாக தயாரித்து மறைமுகமாக விற்கப்படும் சாராயத்தில் வியாபார நோக்கத்தோடு போதையை அதிகரிப்பதற்காக கலக்கப்படும் ரசாயனம் உடனடி மரணத்தை ஏற்படுத்துகிறது.

முறைப்படி தயாரித்து அரசால் விற்கப்படும் மதுவகைகள் சற்று தாமதமாக மரணத்தை விளைவிக்கிறது.

இந்த விபரம் எல்லாம் யாருக்கும் தெரியாத விஷயம் அல்ல. கடந்த காலங்களில் கிட்டத்தட்ட நடுத்தர வயதைத் தாண்டியவர்கள் தான் மது பழக்கத்துக்கு அடிமையானார்கள்.

ஏன், புகைபிடிக்கும் பழக்கம் கூட, வயதானவர்களிடம் மட்டுமே காணப்பட்டது.

அந்த கால திரைப்படங்களில் வில்லன் தான் குடிகாரனாக சித்தரிக்கப்படுவான்.


பரிச்சயமான சொற்கள்தற்போது நிலைமை முற்றிலுமாக மாறி, கதாநாயகனே, 'போரடிக்கிறது ஒரு டீ சாப்பிடுவோமே' என்பது போல, 'பீர் சாப்பிடுவோமா' என்று கேட்பது போல காட்சிகள் வருகின்றன. ஒரு கட்டிங், ஒரு ரவுண்டு, ஒரு குவார்ட்டர் என்ற சொற்கள் புகுந்து அனைவருக்கும் பரிச்சயமான சொற்களாகி விட்டன.

அந்த அளவுக்கு சமுதாயத்தில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் வேரூன்றி விட்டது.

பூரண மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில், நேர்மையற்ற காவல்துறை அதிகாரிகள் துணையோடு, கள்ளச்சாராயம் விற்று கோடீஸ்வரன் ஆகி, அரசியலில் சிலர் பிரபலமானதும், பல கல்வி நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்கள் ஆனதையும் இந்த சமுதாயம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.

கள்ளச்சாராயம் காவல் துறையினரின் நேர்மையை பதம் பார்த்து அவர்களின் உத்தியோகத்துக்கு உலைவைத்து, காவல்துறைக்கு களங்கம் விளைவித்தது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை பல அதிகாரிகளின் திறமைக்கும், நேர்மைக்கும் சான்றாக அமைந்து புகழ் பெற்று தந்ததும் இந்த கள்ளச்சாராயம் தான்.


கள்ளச்சாராய சாவுஇதை கூற எனக்கு தகுதி இருக்கிறது. காரணம், மதுவிலக்கு பிரிவில் மெச்சத்தகுந்த பணிக்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் விருதுபெற்றவன் நான்.

அண்டை மாநிலங்களில் இருந்து சாராயம் கடத்தி வரப்படுவதைத் தவிர்க்கவும், கள்ளச்சாராய சாவு, சாராய வியாபாரிகளிடம் பணம் குவிந்து, அவர்கள் தாதாவாக உருவாவதைத் தடுக்கவும், தளர்த்தப்பட்ட மதுவிலக்கு, மலிவு விலை மது என்று துவங்கி, அரசு கருவூலத்தை நிரப்பும் முக்கிய ஆதாரமாக உருவெடுத்து விட்டது.

இதுவே, 'டாஸ்மாக்'கின் வரலாறு.

குடியை நிறுத்தினால் தள்ளாடும். குடிகாரர்கள் போல மது விற்பனையை நிறுத்தினால் தடுமாறும் நாட்டின் நிதிநிலைஎன்றாகி விட்டது.

அதனால் தான் ஆட்சிப் பொறுப்பேற்கும் ஒவ்வொரு அரசும், 'பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' என்பது போல செயல்பட்டு, கடும் விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

மதுவிலக்கு அமலில் தோய்வும், தோல்வியும் ஏற்படுவதற்கு காரணம், சமுதாயத்தில் வேரூன்றி வளர்ந்து கொண்டே இருக்கும் குடிப்பழக்கம். அதன் காரணமாக மதுபானங்களின் தேவை அதிகமாகிவிட்டது.


அதிக லாபம்எனவே, குருகிய காலத்தில் மிக அதிக லாபத்தை ஈட்டித் தரும் இந்த வியாபாரத்தை கையில் எடுக்க போட்டி அதிக மாக உள்ளது. அரசியல்வாதி களின் தலையீடும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது.

அவ்வாறு முளைக்கும் வியாபாரிகளின் முதல் இலக்கு, மதுவிலக்கை அமல்படுத்தும் பொறுப்பை சுமந்து கொண்டிருக்கும் காவல் துறை தான்.

நேர்மையும், திறமையும் அற்ற காவல் அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு காசாசையைக் காட்டி, தங்கள் வழிக்கு கொண்டு வருவது அவர்களுக்கு ஒரு பெரிய காரியமல்ல.

கடந்த காலங்களில் கிராமங்களில் பட்டாணியார், கிராம முனிசீப், மணியக்காரர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட தற்போதைய கிராம நிர்வாக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கிராமம் இருந்தது, எந்த ஒரு தகவலும் அவர் மூலமாகவே காவல் நிலைய பொறுப்புஅதிகாரிக்கு செல்லும்.

'யாதாஸ்த்து' என்ற பெயருடைய அறிக்கை புத்தகம் மூலமாக அனுப்பப்படும் அந்தத் தகவலை நிலையப்பொறுப்பு அதிகாரி அலட்சியப்படுத்த முடியாது. காரணம் அதன் நகல் ஒரே சமயத்தில் வட்டாட்சியருக்கும் அனுப்பப்படும்.

ஆனால் அவ்வாறு அனுப்பப்படும் தகவல் சில சமயங்களில் முக்கிய வழக்காக பதிவுசெய்து விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு செல்லும்போது, சில நுனுக்கங்கள் அடிப்படையில் தோல்வியைச் சந்திக்கும்.

சில வில்லங்கமான பட்டாமணியார்கள், சின்ன சின்ன விஷயத்துக் கெல்லாம் யாதாஸ்த்து போட்டு நிலையப்பொறுப்பு அதிகாரியின் வெறுப்பைசம்பாதித்துக் கொள்வர்.

விபரம் தெரிந்த பட்டாமணியார்கள், யாதாஸ்த்து புத்தகத்துடன் காவல் நிலையத்துக்கே வந்து நிலையப் பொறுப்பு அதிகாரியிடம் கலந்தாலோசித்து வழக்கு விசாரணையை பாதிக்காமல் புகார் எழுதிக் கொடுத்து விட்டுப் போவார்.

காவல் துறையின் ஒத்துழைப்புடன் அந்தப் பகுதியில் முன்னதாகவே பலராலும் மதிக்கப்பட்டு வந்த மணியக்காரர், அந்த கிராமத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால், அவரை மீறி அங்கு எந்த தவறான செயலும் நடக்கவோ, நடந்து அவரது கவனத்துக்கு வராமல் போகவோ வாய்ப்பில்லை.

காவல் துறை அதிகாரிகளுக்கு அவர்களின் புலன் விசாரணை உட்பட பல பிரச்னைகளுக்கு அந்த கால பட்டாமணியார்களின் உதவி மிகவும்பயனுள்ளதாக இருந்தது.

சுயகவுரவத்துக்காக ஏழை மக்கள் கட்ட வேண்டிய வரியை தன் சொந்த சொத்தை விற்று கட்டி விட்டு, திவாலான மணியக்கார்களை நான் என் பணிக்காலத்தில் கண்டிருக்கிறேன்.

இந்நிலையில் நேர்மையற்ற பட்டாமணியாரும், 'கர்ணம்' என்றழைக்கப்பட்ட கணக்குப்பிள்ளையும் அரசு நிலங்களை அபகரிப்போருக்கு துணைபோனதால் அவர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு, கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

கூடவே பழைய செயல்பாட்டில் இருந்த நல்ல பயன்களும் பறிபோய்விட்டது.

அவர்களை மீறி கிராமத்தில் ஏதும் நிகழ வாய்ப்பு இல்லை என்பதால் தான் ஒரு காலகட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டால், அந்த கிராம நிர்வாக அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புவிடுக்கப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் தன் நிர்வாகத்தின் கீழ் உள்ள கிராமத்தில் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கிற, நிகழும் வாய்ப்பு இருக்கிற ஒரு குற்றம் அல்லது அசம்பாவிதம் பற்றி எழுத்து வடிவிலான தகவலை காவல் துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கு அனுப்பினால், அதை அவர் புறக்கணிக்க முடியாது.

காரணம் அவரது அறிக்கை அதே சமயத்தில் வட்டாட்சியருக்கும் அனுப்பப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு சென்று சேர்ந்து விடும்.

தற்போது கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு குடியிருப்பு வழங்கியுள்ளபோதும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவு படி தாங்கள் பணியாற்றும் கிராமத்திலேயே வசிப்பதில்லை.

நேர்மையற்ற கிராம நிர்வாக அலுவலர்கள், லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிக்கப்படுவது வாடிக்கை செய்தியாகி விட்டது.

சமீபத்தில் நேர்மையான ஒரு கிராம நிர்வாக அலுவலர் குற்றவாளிகளால் கொலை செய்யப்பட்ட கொடுமையும் நிகழ்ந்தது. இரண்டுக்குமே அவர்கள் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் மெத்தனம் அல்லது நேர்மையின்மை தான் காரணம்.

குதிரைகள் ஓடிய பின் லாயத்தைப் பூட்டுவது போன்று, கடும் ஒழுங்கு நடவடிக்கைகள், இழப்பீடு வழங்குதல் போன்றவற்றைத் தவிர, ஆளும் அரசுக்கு வேறு வழிஇல்லை.

அரசின் கண்ணில் மண்ணைத் துாவும் ஒரு சில நேர்மையற்ற அதிகாரிகளும் அவர்களைக் கண்டுகொள்ளாத அல்லது அவர்களுக்கு துணைபோகும் நேர்மையும், திறமையும் இல்லாத உயர் அதிகாரிகளும் திருந்தாத வரையில்...

ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள், அரசு அதிகாரிகள் துணையின்றி ஊழல் செய்ய வாய்ப்பு இல்லை. ஆனால் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தெரியாமல் கையூட்டில் பையை நிரப்பிக் கொள்ளும் வாய்ப்பு அதிகாரிகளுக்கு உள்ளது.


பெண்கள் போராட்டம்வீட்டில் இருக்கும் பெண்கள்எல்லாம் ரோடுக்கு வந்து போராட்டம் நடத்தி மதுக்கடைகளை மூடுங்கள் என்று அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், டாஸ்மாக் கடையிலிருந்த மதுபான பாட்டில்களை உடைத்து நொறுக்கினர்.

அங்கிருந்த ஒரு பெரியவர் கேட்டார்... உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒன்றிரண்டு பேர் குடித்து விட்டு கெட்டுப் போகின்றனர் என்று தானே இங்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் இருக்கும் அந்த ஒன்றிரண்டு நபர்களை குடிக்காமல் இருக்கச் செய்து விட முடியுமானால், இந்தக்கடை தானாக மூடப்பட்டு விடுமே.

வீட்டில் இருக்கும் இரண்டு மூன்று பாட்டில்களை உடைக்க மனமில்லாமல் டாஸ்மாக் கடையில் இருக்கும் பாட்டில்களை உடைத்து அழித்திருக்கிறீர்கள்.

இந்த இழப்பும் உங்கள் தலையில் தான் சுமத்தப்பட இருக்கிறது, வரியாக என்றார்.

ஒரு பிரச்னையின் ஒரு அங்கமாக இருக்கும் நம்மால் அந்த பிரச்னைக்கு தீர்வு காண இயலவில்லை என்றால், அந்தபிரச்னையே நாம் தான்.

தொடர்புக்கு

இ-மெயில்:

spkaruna@gmail.com

மா.கருணாநிதி, காவல் துறை கண்காணிப்பாளர், ஓய்வுபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X