
விட்டல் மகராஜ் தனது நாம சங்கீர்த்தனத்தால் சென்னையை பக்தியால் நிறைத்துவிட்டு சென்றிருக்கிறார்.
எல்லோருக்கும் புரியும்படியாக, எளிமையான வார்த்தையில் சொல்வதானால் அவர் நிகழ்த்தியது பக்தி பஜனைதான் ஆனால் இந்த பஜனையை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றிருப்பதுதான் அவரது திறமை.

தாயார் ருக்மணியோடு சென்று கொண்டு இருந்த பகவான் கிருஷ்ணர், போகும் வழியில் புண்டரீகன் என்ற தன் பக்தனை ருக்மணிக்கு அறிமுகம் செய்துவைக்க எண்ணினார்.
மழை பெய்து சேரும் சகதியுமாக இருந்த புண்டரீகன் வீட்டு வாசலில் நின்று கிருஷ்ணர் தண்ணீர் கேட்டிருக்கிறார்,உடனே புண்டரீகன் வீட்டினுள் இருந்து ஒரு செங்கல்லை வெளியே துாக்கிப்போட்டு, சேறும் சகதியும் ஒட்டாமல் அதன் மீது நில்லுங்கள், நான் என் பெற்றோருக்கு பணிவிடை செய்து கொண்டிருக்கிறேன், அது முடிந்ததும் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

அதே போல பெற்றோருக்கு பணிவிடை செய்துவிட்டு வந்த புண்டரீகன்,தான் இவ்வளவு நேரம் காக்க வைத்திருந்து கிருஷ்ணரை என்பது தெரிந்ததும் ,சாஷ்டாங்கமாக கிருஷ்ணர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார், பராவாயில்லை நீ உன் பெற்றோருக்கு செய்யும் பணிவிடையால் மனம் மகிழ்ந்தோம் என்றவர் வேண்டும் வரம் கேள் என்றார்.
நீங்கள் இப்படி செங்கல் மீது நிற்பது போன்ற தோற்றத்துடனேயே இந்த இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு நாள்தோறும் அருள்பாலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படி செங்கல் மீது நின்றபடி கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இடம்தான் புண்டரீபுரமாக இருந்து இன்றைக்கு மருவி அழைக்கப்படும் பண்டரிபுரமாகும்.
மகராஷ்ட்ரா மாநிலம் சோலப்பூர் மாவட்டம் பீமா நதிக்கரையில் அமைந்துள்ள பண்டரிபுரம் கிருஷ்ணர் கோவில் நாட்டில் உள்ள முக்கிய வைணவ தலங்களில் ஒன்றாகும்.
இங்கு இவரை பண்டரிநாதர் என்றும் விட்டல என்றும் அழைக்கின்றனர்.செங்கல் மீது நின்ற கோலத்தில் இருந்தபடி அருளாசிபுரியும் இவரை தரிசக்க நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
பாண்டுரங்கனின் புகழை பாடும் விட்டல் மகராஜ் கும்பகோணம் பக்கத்தில் கோவிந்தபுரம் என்ற இடத்தில் பண்டரிபுரம் போன்ற அமைப்பில் ஒரு கோவில் அமைத்துள்ளார்,அத்துடன் பாண்டுரங்கனின் புகழை நாம சங்கீர்தனமாக நாடு முழுவதும் சென்று பாடிவருகிறார்.அப்படித்தான் சென்னை மியூசிக் அகாடமியில் தனது நாமசங்கீர்த்தனத்தை நிகழ்த்தினார்.
இரவு 7 மணிக்கு நிகழ்ச்சிக்கு மக்கள் மாலை ஐந்து மணிக்கே வந்து இடம் பிடித்து அமர்ந்துவிடுகின்றனர் பிறகும் இடம் கிடைக்காமல் நடைபாதைகளில் எல்லாம் அமர்ந்து கொள்கின்றனர்.பொதுவாக பஜனை போன்ற நிகழ்ச்சிக்கு வயதானவர்களே அதிகம் வருவர், ஆனால் இவரது நிகழ்ச்சிக்கு பெண்கள் தங்கள் குழந்கைளுடன் திரளாக வந்திருந்தனர்.
பாண்டுரங்கா என்று மகராஜ் பாட ஆரம்பித்ததுமே அரங்கத்தில் உள்ள பெரும்பாலனவர்கள் தாங்களும் எழுந்து ஆடுகின்றனர் குழந்தைகள் மேடைக்கே சென்று அங்குள்ள வேதபாடசாலை மாணவர்களுடன் சேர்ந்து ஆடுகின்றனர்.கூடுதலாக ஒரு நாள் வேதபாடசாலை மாணவர்களின் சிவதாண்டவமும் நடைபெற்றது.
இந்த வயதில் இப்படி ஆழமாக பக்தியை பதித்துவிட்டால் பிறகு எந்த வயதிலும் இவர்கள் மாறவும் மாட்டர் மாற்றவும் முடியாது.நகரின் பல விஜபிக்கள் வருவது தெரியாமல் வந்து இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மகிழ்ந்து சென்றனர் அவர்களில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர்.இரண்டு மணி நேரம் இங்கு இருந்துவிட்டு செல்லும் போது மிகவும் எனர்ஜி பெற்றவனாக உணர்கிறேன் என்றார்.
விட்டல் மகராஜின் நாம சங்கீர்த்தனம் ஒரு புது அனுபவம்
-எல்.முருகராஜ்.