- -நமது நிருபர் --
ஆலந்துார் தாலுகாவில், 8.22 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட போது, ஆலந்துார் மண்டலம் உருவாக்கப்பட்டது.
இம்மண்டலத்தில், புகழ்பெற்ற சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ளது.
தென் சென்னை இணை கமிஷனர் அலுவலகம், 'மெட்ரோ', மின்சார ரயில் நிலையம், ராணுவ பயிற்சி மையம், தனியார் கல்லுாரிகள் உள்ளிட்டவையும் அமைந்துள்ளன.
ஆனால், ஆலந்துார் தாலுகாவில், அரசு கல்லுாரி இல்லை. ஒவ்வொரு முறையும் எம்.பி., - எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 'இப்பகுதியில் அரசு கல்லுாரி கொண்டு வரப்படும்' என, வாக்குறுதி அளிப்பர்.
தேர்தல் முடிந்தவுடன், வெற்றி பெற்றவர் வாக்குறுதியை மறந்துவிடுவார். இதனால், ஆலந்துார் தாலுகாவில், அரசு கல்லுாரி என்பது கனவாகவே உள்ளது.
மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
ஆலந்துார் தாலுகாவில் ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான மாணவியர் பிளஸ் 2 முடித்து வெளியேறுகின்றனர். அவர்கள் மேல்நிலைக் கல்விக்காக, தனியார் கல்லுாரிகளை நாட வேண்டியுள்ளது.
மகளிர் கல்லுாரியில் சேர, பல கி.மீ., துாரம் பயணிக்க வேண்டியுள்ளது. பாதுகாப்பு காரணமாக பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் படிப்பை நிறுத்துகின்றனர். இதனால், பல நுாறு மாணவியரின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
ஆலந்துார் மண்டலத்தில் கல்லுாரி அமைப்பதற்கு, போதிய அரசு நிலம் உள்ளது. இது குறித்து கல்வித்துறையும், தமிழக அரசும் உரிய உத்தரவு பிறப்பித்து, வரும் கல்வியாண்டிலாவது மகளிர் கல்லுாரி அமைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.